"தாய்ப்பாலில் டையாக்சின் கலப்பு, பெண்கள் குடிப்பழக்கம் அதிகரிப்பு" - அரசு மீது சௌமியா அன்புமணி சரமாரி தாக்கு!
தமிழ்நாட்டில் ஆண்கள் குடித்தது போய் தற்போது பெண்களும் அதிக அளவில் குடிக்கும் நிலையை உருவாக்கியது தன் திமுக அரசின் சாதனை என சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

கடலூர் : ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆண்கள் குடித்தது போய் தற்போது பெண்களும் அதிக அளவில் குடிக்கும் நிலையை உருவாக்கியது தன் திமுக அரசின் சாதனை என சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு சென்ற சௌமியா அன்புமணிக்கு, பெண்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் சௌமியா அன்புமணி மேடைப்பேச்சு:
கடந்தாண்டு மழையில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது ஆனாலும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை கூறு போட்டு விற்பதற்கு திமுக அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க கூடாது.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அவ்வாறு அறிவித்தால் மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு போதுமான நிதி கிடைக்கும்.
மேலும் கடலூர் மாவட்டத்தையும் டெல்டா மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் அவ்வாறு சேர்த்தால் தான் என்எல்சி நிறுவனம் சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்து மிக்க நிறுவனங்களிடமிருந்து கடலூர் மாவட்டத்தை காப்பாற்ற முடியும்.
இல்லையென்றால் நிலம் நீர் காற்று மாசடைந்து கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.
வடலூரில் வள்ளலார் கோவிலுக்கு அருகில் பெருவழி விழா நடத்துவதற்காக 110 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தது பொதுமக்கள் அரசாங்கம் கொடுக்கவில்லை அந்த இடத்தை தற்போது திமுக அரசு அபகரிக்க நினைக்கிறது. அங்கு வள்ளலார் பண்பாட்டு மையத்தை அமைக்க போகிறார்களாம்.
வள்ளலார் பண்பாட்டு மையத்தை அமைக்கலாம் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அது வடலூரில் தேவையில்லை நீங்கள் சென்னை உள்ளிட்ட வேறு இடங்களில் கட்டுங்கள். வாருகட்டினால் அது வள்ளலாரை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் இங்கு பெருவழிக்கான நிலத்தை அமழிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகள் மூலமாக நீர் நிலைகளில் டையாக்சின் கலந்து இருக்கிறது இதனால் கேன்சர் பாதிப்புகள் அதிகமாக வருகிறது. இளநீர் குடித்தால் கூட அதில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலில் கூட டையாக்சின் கலந்து இருக்கக்கூடியதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 15 நாட்கள் கூட வேலை வய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. வேலையே கொடுக்காமல் எதற்காக மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டு ஆண்களை குடிக்க வைத்தது போய், தற்போது பெண்களையும் அதிக அளவில் குடிகாரர்கள் ஆக்கியது தான் இந்த அரசின் சாதனை. கிராமங்களில் ஆண்கள் குடித்து விட்டு வந்து பெண்களை அடிப்பது இன்னும் தொடர்ந்து வருகிறது.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றது அரசு பள்ளிகள் தரமாக இல்லாத காரணத்தால் தற்போது பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான கல்வியை கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு அதற்கென்று ஒரு தனி அமைச்சர்?
நல்ல படிப்பையும், வேலையும் கொடுக்காமல் வாழ விடாமல் செய்வதற்கு எதற்கு ஒரு அரசாங்கம்?
108 ஆம்புலன்ஸ், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜிப்மர் மருத்துவமனை, ஒரே ஊசியை பலமுறை பயன்படுத்தாமல் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி ஊசிகள் என்று மருத்துவத்துறையில் புரட்சி செய்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அவர்கள்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பூஜ்ஜியமாக உள்ளது. இது ஆறாக இருந்தாலும் 60 வயதாக இருந்தாலும் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை.. உங்களுக்கு எதிராக இவ்வளவு பிரச்சனைகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமே குடிதான். போதையில் வரும் ஆண்கள் தங்களுடைய நிலையை மறந்து பெண்களிடம் அத்து மீறுகிறார்கள்.
வருடம் தோறும் அத்தனை கற்பழிப்புகள் கொலைகள் நடக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனை தடுப்பதற்கு நாம் அனைவரும் துணிந்து நிற்க வேண்டும் நம் வீட்டில் பெண்கள் பாதிக்கப்பட்டால் அந்த பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத்தர நாம் துணிச்சலோடு அந்த பெண்ணின் பக்கம் நிற்க வேண்டும். அச்சப்பட்டு கொண்டு மறைத்து வைக்கக் கூடாது என சௌமியா அன்புமணி ஆவேசமாக பேசினார். பெண்கள் இதுவரை ஏமாந்தது போதும் இனிமேல் நமக்கான உரிமையை எங்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது.





















