அதுக்கு தனி டீம் இருக்கு.. ஹெலிகாப்டர் விபத்து விவகாரத்தில் கையை விரித்த வானிலை ஆய்வு மையம்?!
ராணுவ ஹெலிகாப்டர் பயணத்துக்கும், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இந்திய வானிலை ஆய்வுமையம் பொறுப்பேற்காது என தகவல் வெளியாகியுள்ளது
குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக இந்தியா விமானப்படையின் ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில், தமிழக காவல்துறை சார்பிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற குன்னூர் காட்டேரி பகுதியில் உயர்மின்னழுத்த மின்வாரிய கம்பி உள்ளதா? என்று மின்வாரியத்திடம் நீலகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியில் அப்போது நிலவிய வானிலை நிலவரம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்க சென்னை வானிலை ஆய்வு மையத்திடமும் காவல்துறை சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் ஹெலிகாப்டர் விபத்தை செல்போனில் வீடியோ எடுத்த நபரின் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்கு அந்த வீடியோ கோவை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் பயணத்துக்கும், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இந்திய வானிலை ஆய்வுமையம் பொறுப்பேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையை பொறுத்தவரை அவர்களுக்கான தனி வானிலை ஆய்வு குழு உண்டு. அந்தக்குழுவில் சிறந்த பயிற்சி பெற்ற வானிலை நிபுணர்கள் உண்டு. அப்படி இருக்கையில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படாமல் இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்து தலையிடாது எனக் கூறுகின்றனர் அதிகாரிகள். அதன்படி எந்தவித முன்னறிவிப்பையும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த தகவலை தி இந்து பதிவிட்டுள்ளது.
ஆனால், வானிலை ஆய்வு மையம் விமான நிலைய தேவைக்காகவே முன்னெச்சரிக்கையை அனுப்பும். அப்படியான எச்சரிக்கை கோவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த முன்னெச்சரிக்கைக்கும் ஹெலிகாப்டர் பயணத்துக்கும் தொடர்பிருக்காது . ஹெலிகாப்டர் உயரம் குறைந்த தாழ்வான பகுதியிலேயே பயணிக்கும் என்பதாலும், வானிலை அடிக்கடி மாறும் என்பதாலும் விமான பயணத்துக்கான முன்னெச்சரிக்கை அங்கு பயன்படாது என்கின்றனர் அதிகாரிகள்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இதில் எந்த விதத்திலும் முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்பதால் விமானப்படைக்கான வானிலை ஆய்வுக்குழு முன்னெச்சரிக்கை கொடுத்ததா? எப்படியான எச்சரிக்கை கொடுத்தது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. விசாரணையில் அதற்கான பதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் விபத்து நடந்த நேரத்திலான செயற்கைக்கோள் படத்தினை இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் போலீசார் கேட்டுள்ளனர். செயற்கைக்கோள் படம் வெளியானால் விசாரணைக்கு உதவும் எனத் தெரிகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்