"அனைத்து குழுக்களும் சிறப்பாக செயல்பட்டால் 365 நாட்களும் சட்டமன்றம் இயங்குவதற்கு சமம்" -சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன்!
தமிழகம் முழுவதும் 15000 உறுதிமொழிகள் நிலுவையில் இருந்தது. 19 மாவட்டங்களில் ஆய்வு செய்து 5 ஆயிரம் சட்டப்பேரவை உறுதிமொழிகள் நான் பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் வேல்முருகன்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு நடத்தியது. குறிப்பாக, குருவம்பட்டி வன உயிர்கள் பூங்கா, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாநகராட்சி குடிநீர் இணைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட இடங்களில் சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு நடத்தினர்.
பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், குழுவின் தலைவருமான வேல்முருகன் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகம் முழுவதும் 15,000 உறுதிமொழிகள் நிலுவையில் இருந்தது. 19 மாவட்டங்களில் ஆய்வு செய்து 5000 உறுதிமொழிகளை பத்துக்கும் மேற்பட்ட துறை தலைவர்கள், செயலாளர்களை நேரில் அழைத்து ஆய்வின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் கொடுக்கும் உறுதிமொழியை இத்தனை காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கேள்வி கேட்பதுதான் உறுதிமொழி குழுவின் செயலாகும்.
இதேபோன்று பொதுகணக்கு குழு அரசு அனுமதி அளித்த வரம்புக்குள் செலவு செய்துள்ளதா? என்பதை கேட்பதுதான். இதுபோன்று அனைத்துக் குழுக்களும் முறையாக கடமையை செய்தால் 365 நாட்களும் சட்டமன்றம் இயங்குவதற்கு சமம் என்பதால், இதுபோன்ற குழுக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு வழங்கப்பட்ட பணியை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சிறப்பாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்விற்கு வந்தபோது 200க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் 80 திட்டங்கள் இதுவரை முடிவுற்றிருக்கிறது. அதேபோன்று 130 க்கும் மேற்பட்ட திட்டங்கள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ளது. இதில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அறிவித்த பெரும்பாலான அறிவிப்புகள் முடிவடைந்துள்ளது என்று கூறினார். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அருங்காட்சியகம் கட்டிடம் ரூபாய் 5 கோடி ரூபாயில் சொந்த கட்டிடம் 90% முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.
குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு புதிதாக பேட்டரி வாகனம் போன்றவற்றை கோரிக்கையாக சட்டமன்ற உறுப்பினர் கொடுத்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பேட்டரி வாகனம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிதாக குழந்தைகளுக்கு பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நிதியிலிருந்து செய்யப்பட்ட திட்டங்களை பார்வையட்டும். அப்போது குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு செல்லும் வழியில் இணைப்பு சாலை இல்லாமல் உள்ளது. எனவே உடனடியாக அந்த இணைப்பு சாலையை போடுவதற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. வன உயிரியல் பூங்காவில் கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதியை மேம்படுத்த வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் உடன் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். அதில் மருத்துவர்கள் போதுமான அளவுக்கு உள்ளனர். கால்நடை மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். சேலம் மாநகராட்சியை பொருத்தவரை பாதாள சாக்கடை திட்டம் நீண்ட காலமாக நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாதாள சாக்கடை திட்டம் நீண்ட மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஒரு மண்டலத்தில் முடியும் தருவாயில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். விரைந்து அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.