50 ஆண்டுகளுக்கு முன் இப்படியா? அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மன் பார்வதி சிலை....
கடத்தப்பட்ட பார்வதி தேவி அல்லது உமா தேவியின் சிலை சுமார் 12 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தது.
கும்பகோணத்தில் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிலை :
கும்பகோணம் தண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி சிலை ஒன்று காணாமல் போனது. இது குறித்து 1971 ஆம் ஆண்டு , தண்டந்தோட்டம் பகுதி வாசிகள் , உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கின்றனர். அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதால் மீண்டும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்பகுதியை சேர்ந்த கே.வாசு என்பவர் மீண்டும் புகார் அளித்திருக்கிறார். வழக்கின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது . ஆனாலும் வழக்கில் எவ்வித நகர்வும் இல்லை. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் எம்.சித்ரா தலைமையில் தீவிர விசாரணை நடைபெற துவங்கியது. அப்போதுதான் காணாமல் போன நடபுரீஸ்வரர் ஆலய பார்வதி தேவி சிலை வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களில் கைமாறியது தெரிய வந்தது.
சிலை கண்டுபிடிப்பு :
இந்த நிலையில் காணாமல் போன சோழர்கால பார்வதி தேவியின் சிலை நியூயார்க்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலைக்கடத்தல் பிரிவு சிறப்பு சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தற்போது சிலையை மீட்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்கான ஆவண முயற்சிகள் நடைப்பெற்று வருவதாக சிலைக்கடத்தல் பிரிவு சிஐடி டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.
சிலையின் சிறப்பம்சம் :
கடத்தப்பட்ட பார்வதி தேவி அல்லது உமா தேவியின் சிலை சுமார் 12 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தது. செப்பு-அலாய் கலந்து வடிவமைக்கப்பட்ட நின்ற நிலை சிலையானது சுமார் 52 செ.மீ உயரம் கொண்டது மற்றும் அதன் மதிப்பு 212,575 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 1,68,26,143) என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கரண்ட முகுடா என்று அழைக்கப்படும் கிரீடத்தை பார்வதி சிலையில் வடிவமைத்துள்ளனர். கிரீடத்தில் உள்ள வடிவங்கள் கழுத்தணிகள், கவசங்கள், கச்சை மற்றும் ஆடை வெண்கலத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.நம்பிக்கையின் வடிவமாக பார்க்கப்படும் உமாதேவியின் சிலையை விரைவில் மீட்டு தங்கள் நடனபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தில் வைக்க வேண்டும் என கும்பகோணம் தண்டந்தோட்டம் பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்