CM Stalin Delhi: ”நாளை தூத்துக்குடி,நெல்லை, செல்கிறேன்.. கணிப்பை விட அதிக மழை” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி
CM Stalin Delhi: பிரதமரை சந்தித்த பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செல்கிறேன் என, டெல்லியில் அளித்த பேட்டியின் போது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ம் தேதி புயலும், அதன் காரணமாக ஒருநாள் முழுக்க கடுமையான மழையும் பெய்தது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பெருமளவில் சேதம் தடுக்கப்பட்டது. மக்கள் பேரபத்திலிருந்து காக்கப்பட்டார்கள். இதனை ஒன்றிய அரசின் குழுவும் உறுதி செய்து, மாநில அரசை பாராட்டியது. மழை நின்றதுமே நிவாரணப் பணிகளை தொடங்கினோம். மறுநாளே பிரதான சாலைகளில் போக்குவரத்து சீரடைந்தது. மின் இணைப்பானது 3 நாட்களில் சீரானது. நிவாரணப் பொருட்கள் தேவையான நபர்களுக்கு வழங்கப்பட்டதோடு, 20 அமைச்சர்கள் களத்தில் இருந்தனர். நானும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். புயலுக்கு முன்பும், பின்பும் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக தான் பாதிப்பு குறைந்தது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார். அவர் தலைமை செயலகத்தில் என்னை சந்தித்த போது, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய முதற்கட்டமாக ரூ.5,050 கோடி தேவை என வலியுறுத்தினேன். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு, பிரதமரிடம் வழங்கினார். ஒன்றிய அரசு வழக்கமாக வழங்கும் 450 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் குழு 3 நாட்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த பிறகு என்னை சந்தித்தனர். அப்போது, முழுமையான சேதங்களை கணக்கிட்டு தற்காலிக நிவாரணமாக 7033 கோடியும், நிரந்தர தீர்வு பணிகளுக்காக 12 ஆயிரத்து 59 கோடியும் வழங்க வேண்டும் என கோரியிருந்தேன். ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து வழங்கி வரப்படுகிறது. ஒன்றிய அரசு நிதி வழங்கினால் மட்டுமே முழுமையான நிவாரணப் பணிகள் மேற்கொள்ள முடியும்.
தென்மாவட்டங்களில் பெருமழை:
பிரதமரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே, தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டியது. இதனால், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை கண்டுள்ளன. வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தாலுமே, அவர்கள் குறிப்பிட்டதை விட பல மடங்கு, அந்த மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான மழை பெய்தது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 94 செ.மீ., மழை பெய்து அப்பகுதியே வெள்ளக்காடானது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்றே தாமதமாக கிடைத்தாலும், சொன்னதை விட அதிகப்படியான மழை பெய்ததாலுமே, தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.
மீட்பு பணிகள் தீவிரம்:
மழைப்பொழிவு அதிகமானதுமே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளுக்காக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ராணுவ வீரர்கள் 168 பேர் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட உள்ளனர். 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் சூழந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து பேசி, நிலையை கண்காணித்து வருகிறோம். மக்களை காப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியையும் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்.
இரவு 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்கிறேன்..
எனவே, சென்னை பெருவெள்ளத்திற்காக வைக்கப்பட்ட கோரிக்கையுடன், தென்மாவட்ட வெள்ள சேதங்களையும் இணைத்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமரிடம் நேரம் கேட்டு இருந்தேன். இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களையும் பிரதமரிடம் வழங்குவேன். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் உருவாக்க, உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் நிதி வழங்கிட பிரதமரிடம் கோர இருக்கிறேன். அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பாதிப்பிற்கான உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறேன். பிரதமரை சந்தித்த பிறகு நாளை காலை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு செல்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.