வாரிசு அரசியல் பழிச் சொல்லுக்கு ஆளானேன்! வைகோ பரபரப்பு பேச்சு
துரை.வைகோ அரசியலுக்கு வந்ததால் வாரிசு அரசியல் பேசியவன் என பழிச் சொல்லுக்கு நான் ஆளாகியுள்ளேன்.

விழுப்புரத்தில் மதிமுக சார்பில் மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ.,
கூட்டத்தில் சிலர் பொறுமையோடு உட்காராமல் வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். இதுவா நீங்கள் கட்சிக்கு செய்யும் சேவை. நான் உடல் நலம் இல்லாமல் ஒரு நாளைக்கு நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்கிறேன். இன்று காலையில் தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு தற்போது விழுப்புரம் வந்துள்ளளேன்.
முக்கியமான ஒரு காலகட்டத்தில், நம்மை தூற்றியும், நிந்தனை செய்தும், இந்த கட்சி அழிந்து விட்டது என்று மனசாட்சியை புதைத்துவிட்டு ஒன்றிரண்டு நிருபர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் மதிமுக செத்துப் போய்விட்டது என கூறும் நேரத்தில், அதனை கட்டிக் காத்தவர்கள் லட்சக்கணக்கான தொண்டர்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள் இந்த இயக்கம் எத்தனையோ நிலைமைகளை கடந்து வந்துள்ளது. துரோகங்கள் எனக்கு புதியவை அல்ல. எத்தனையோ துரோகங்கள் பார்த்து விட்டேன்.
என்னை வசை பாட சிறையில் நல்ல வசதியோடு இருந்தேன் என மனசாட்சி இல்லாமல் தொலைக்காட்சியில் பேசிய நபருடன் உறவு வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பெயர். துரோகி என்ற பட்டத்தை தவிர வேறு என்ன பட்டம் கொடுப்பது. இதை தொலைக்காட்சியிலே சொன்ன மனிதர் திமுக சொத்துகளை அபகரித்து அறக்கட்டளை அமைத்தவர். அவருடன் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பேசுகிறார் என நிர்வாக குழுவில் குற்றம் சாட்டியதை அங்கே எதையும் மறுக்காமல் அமைதியாக இருந்து விட்டு வெளியே சென்று நான்கு நாட்களுக்கு முன்பு நான் பேசத்தான் செய்வேன். பழைய அவைத்தலைவரோடு பேசினேன் என்று கூறுகிறார். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவரோடு மூன்றரை ஆண்டு காலமாக தொடர்பு வைத்துள்ளார். குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் வெளிநாட்டு பயணம் குறித்து என்னிடம் கூறவில்லை, திரும்பி வந்தும் என்னை பார்க்கவில்லை. அதையும் நான் பொறுத்துக் கொண்டேன்.
ஆனால் ஒரு சதித் திட்டம் வகுக்கப்படுகிறது. மதிமுகவை அழிக்க வேண்டும் என பல சக்திகள் பின்புறமாக இருந்து இயக்குகின்றன. இந்த கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் நிர்வாக குழுவில் பேசியதற்கு பிறகு நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பகிரங்கமாக என் மீது குற்றம் சுமத்தி விட்டு, இன்னொரு இயக்கத்திற்கு மற்றொரு கட்சிக்கு செல்லவும், இடைக்காலமாக மதிமுக நாங்கள் தான் என ஒரு திட்டத்தை வகுத்ததை நான் அறிந்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அமைதியாக இருக்கிறேன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறேன். என் குடும்பம் இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்துள்ளது.
என்னுடைய மகன் துரை வைகோவை அரசியலுக்கு வரக்கூடாது என சொன்னவன். நிர்வாக குழுவில் எந்த காரணத்தை முன்னிட்டும் துரை வைகோ கட்சிக்குள் வரக்கூடாது என நான் சொன்ன போது நிர்வாக குழு உறுப்பினர்கள் துரை.வைகோ உள்ளே வரக்கூடாது என நீங்கள் சொல்வது சர்வாதிகாரம் என்று கூறினார்கள். அனைத்து மாவட்ட செயலாளர்களும் பேசி வாக்கெடுப்பு நடத்தினார்கள்.
106 பேர் வாக்களித்தனர் இதில் 104 பேர் துரை.வைக்கோ அரசியலுக்கு வர வேண்டுமென வாக்களித்தனர். இரண்டு பேர் வரக்கூடாது என வாக்களித்தனர். 99 சதவீத பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவின் அடிப்படையில் துறை வைகோ அரசியலுக்கு வந்தார். அதனை நான் எப்படி தடுக்க முடியும். அந்த சூழ்நிலையில்தான் துறை வைகோ வர நேர்ந்தது நான் வரக்கூடாது என்று தான் சொன்னேன். துறை வைகோ அரசியலுக்கு வந்ததால் இன்று பழிச் சொல்லுக்கு நான் ஆளாகியுள்ளேன். வாரிசு அரசியல் பேசியவர் என்று பழி சொல்லுக்கு ஆளாகி நிற்கிறேன். அந்த 104 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பழி சொல்லுக்கு ஆளாகவில்லை.
31 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேன்மைக்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து பாடுபட்ட நான் தலைவரையே கொலை செய்ய சதி செய்தவன் என திமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். இந்தக் கட்சியை நான் உருவாக்கவில்லை நிலைமை என்னை அங்கே தள்ளியது. நான் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என கனவிலும் நினைக்கவில்லை. திமுகவை என் உயிருக்கும் மேலாக நேசித்தேன். திமுக தலைவருக்காக என் உயிரை அர்ப்பணிக்கவும் தயாராக இருந்தேன். நான் வெளியேற்றப்பட்டேன்.
இந்துத்துவ சக்திகள், ஆர்.எஸ்.எஸ், பாஜக திட்டம் தீட்டி தமிழ்நாட்டில் நுழைவதற்கு முயல்கிறது. இவர்கள் வந்தால் தமிழ்நாட்டில் ஹிந்தியும், சமஸ்கிருதமும் தான் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஓட்டுரிமை கிடையாது இது அவர்களின் பிரகடனத்தில் உள்ளது. இதனை ஊர் ஊராக சென்று பேசினேன்.
நான் சுயநலம் பார்த்தேனா, இல்லை மந்திரி பதவி கிடைக்கும் என ஏங்கிநேனா. எப்போதும் கூட பிஜேபியோடு பின்னணியில் பேசுகிறேன் என்றும், மகனை மந்திரியாக முயற்சி செய்கிறேன் என்றும் பேசுகிறார்கள். உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா. நான் என் மகனுக்கு மந்திரி பதவி கேட்பேனா.
நடக்காத ஒன்றை என் மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக இப்படி பொய் செய்திகளை வெளியிடுகிறார்கள். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து கர்ஜனை புரிகிறவன் நான். திமுக தான் வெற்றி பெறும் தனிப்பெரும் பார்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறியதை பத்திரிகைகள் எழுதவில்லை, ஆனால் பிஜேபிக்கு தூது விடுகிறார் என எழுதுகிறார்கள். பாஜக கூடாரத்தை உள்ளே விடக்கூடாது என தொண்டர்களிடம் கூறிவருகிறேன். அதனால்தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்த திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டுமானால் இந்துத்துவ சக்திகளை உள்ளே நுழைய விடக்கூடாது.
திமுக வலிமையான கட்சி, நம்மை விட அதிக வாக்காளர் ஆதரவு பெற்ற கட்சி. ஆனாலும் நமக்கும் ஒரு கூட்டம் உள்ளது. அதையும் திமுகவுக்கு பக்கபலமாக நிறுத்துவோம் என தீர்மானம் செய்து அந்த அடிப்படையில் தான் திமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்தோம். இப்பொழுதும் அதே நிலைப்பாட்டில் தான் வைகோ இருக்கிறான். திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். பிஜேபி கூடாரத்தையும், அவர்களோடு தோழமைக் கொண்டுள்ள இயக்கத்தையும் தோற்கடிக்க வேண்டும் என்றார்.





















