Heavy Rain in Chennai: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்: எங்கெங்கு எவ்வளவு மழை? முழு லிஸ்ட் இதோ..!
விடிய விடிய சென்னையில் மழை பெய்து வருவதால் எங்கெங்கு எவ்வளவு மழை என இந்த தொகுப்பில் காணலாம்.
விடிய விடிய சென்னையில் மழை பெய்து வருவதால் எங்கெங்கு எவ்வளவு மழை என இந்த தொகுப்பில் காணலாம்.
சென்னையில் நேற்று அதாவது ஜூன் 18ஆம் தேதி இரவு முதல் கனமழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. அதேபோல் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து இந்த நான்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல் சென்னையில் தரையிரங்கவேண்டிய விமானங்கள், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதாலும், காற்றுடன் கனமழை பெய்து வருவதாலும் துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், ஷார்ஜா, கொழும்பு, மஸ்கட் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
மேலும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களின் அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எங்கெங்கு எவ்வளவு மழை
சென்னையில் அதிகப்படியாக மினம் பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நந்தனம் மற்றும் தரமணியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.
செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.
ஜமீன் கொரட்டூரில். 8.4 செ.மீ மழை பெய்துள்ளது.
பூந்தமல்லியில் 7.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டதில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,146 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 646 மில்லியன் கன அடியில் தற்போது 2 ஆயிரத்து 403 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிபேட், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறுச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.