TN Rain and School Leave | கனமழையால் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. தொடரும் ஆரஞ்சு அலர்ட்.. முழு விவரம் உள்ளே...!
*Schools Holiday: கனமழை காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கனமழை அபாயம் காரணமாக தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேற்கண்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடர்ந்து பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. வடபழனி, கோயம்பேடு, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அரும்பாக்கம், அமைந்தகரை. பாரிமுனை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பணிக்கு செல்வோர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்