High Court: விசாரணைக்கு அழைத்துச்செல்லும் நபர்கள் துன்புறுத்தல்? காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுரை..
விசாரணைக்கு அழைத்துச்செல்லும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச்செல்லும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு விசாரணைக்கு தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், மனுதாரருக்கு எதிராக பெறப்பட்ட புகாரில் விசாரணை நடத்துவதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை விசாரணையில் மாஜிஸ்திரேட் தலையிட முடியாது என்பதால், காவல்துறை தங்களை துன்புறுத்த கூடாது என்ற கோரிக்கையுடன் ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, காவல்துறை விசாரணையில் உயர் நீதிமன்றமும் தலையிடுவது இல்லை என தெளிவுபடுத்திய நீதிபதி, விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்ற கவனதிற்கு கொண்டுவந்தால், நீதிமன்றம் கண்மூடி கொண்டிருக்காது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை பொறுத்தவரை, விசாரணைக்கு மட்டுமே மனுதாரர் அழைக்கப்பட்டுள்ளதால், காவல்துறை விசாரணைக்கு ஆஜராக மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைக்கு அழைப்பதற்கான சம்மன் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட வேண்டும், விசாரணைக்கு ஆஜராகவேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும், விசாரணை நடைமுறைகளை காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் பதிவேற்ற செய்ய வேண்டும், விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறையினருக்கு விதிகளையும் நீதிபதி வகுத்து வழக்கை முடித்துவைத்துள்ளார்.
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பற்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சார்-ஆட்சியர் விசாரணை நடத்துவதில் நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சிறப்பு விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். விசாரணைக்கு ஆஜரான முதியவர் பூதப்பாண்டி, தனது பேரன் சூர்யாவின் பற்களை உடைக்கப்பட்டது உண்மை எனவும், பயத்தில் தனது பேரன் பிறழ் சாட்சியாக மாறியதாகவும் கூறினார். தனது பேரன் உட்பட பலரும் தன்னை சாட்சி சொல்ல வேண்டாம் என தடுத்ததாகவும், அதை மீறி வந்து வாக்குமூலம் அளித்ததாகவும் பூதப்பாண்டி குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது சிபிசிஐடி காவல் துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.