Crime : சினிமாவை மிஞ்சும் அளவில் கடத்தல்.. கிருத்திகா மீது வழக்குப்பதிய வாய்ப்பு..? நீதிபதிகள் சொன்னது என்ன..?
குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மற்றும் முன் ஜாமின் மனுவின் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகிய 4 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி ஜெகதீஷ்லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகிய 8 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,
* கிருத்திகா பட்டேல் கடத்தப்படும் சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளது.
* அவரை கேரளா வழியாக 5 கார்களை அடுத்து அடுத்து மாற்றம் செய்து குஜராத்திற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
* கிருத்திகா பட்டேல் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
* கிருத்திகா பட்டேல் சம்பந்தமான ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, கிருத்திகாவின் வாக்குமூலம் குறித்த செங்கோட்டை நீதிபதியின் அறிக்கையானது, நேற்று சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிருத்திகா தன்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் போலீசார், கிருத்திகாவை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், கிருத்திகாவிடம் விசாரித்தனர். தனக்கு மைத்ரிக் என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதால், தாமாக குஜராத் சென்றதாக தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், ‘‘குஜராத்தில் திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா ? ’’ என்றனர். அதற்கு பதிலளித்த கிருத்திகா தற்போது ஆதாரங்கள் இல்லை என கூறினார்.
உடனே நீதிபதிகள், ‘‘மைத்ரிக்குடன் திருமணம் நடந்தது என்றால், ஏன் வினித்தை திருமணம் செய்ய வேண்டும்? இதன் பிறகு ஏன் குஜராத் செல்ல வேண்டும். இதில் முரண்பாடு உள்ளது’’ என்றனர். தொடர்ந்து அரசு தரப்பில், தன்னை யாரும் கடத்தவில்லை. தாமாக விரும்பி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக இருக்கின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறையினர் தொடரலாம். கிருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது பாதுகாப்பு முக்கியம். எனவே அவரை தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். அவரை, அவருடைய தாத்தா, பாட்டியிடம் ஒப்படைப்பது குறித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.