Water Scarcity: பெங்களூருவை தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடா? கோடையிலிருந்து தப்புவார்களா மக்கள்?
பெங்களூருவை தொடர்ந்து சென்னையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? என அச்சம் நிலவி வருகிறது.
காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் உலகை பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. ஒருபுறம் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், வறட்சி ஏற்படுவதற்கும் மறுபுறம் அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு:
கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதைவிட இந்தாண்டு பெரும் பிரச்னைகளை சந்திக்கும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவை தொடர்ந்து சென்னையிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? என அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், மக்களை நிம்மதியில் ஆழ்த்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஓராண்டில் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், நகரின் ஒரு சில பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதன்மூலம், நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட தகவலில், "சராசரி நிலத்தடி நீர் இப்போது 4.22 மீட்டராக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து 0.26 மீட்டர் அதிகரித்துள்ளது.
சென்னையில் நிலவரம் என்ன?
இருப்பினும், அண்ணாநகர், ஆலந்தூர் போன்ற மண்டலங்களில் கடந்த ஓராண்டாக நிலத்தடி நீர்மட்டம் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் குறைந்துள்ளது. மணலி, மாதவரம், அம்பத்தூர் போன்ற பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது.
தண்டையார்பேட்டையை தொடர்ந்து திரு.வி.க.நகரின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, 1.74 மீட்டர் உயர்ந்துள்ளது. தேனாம்பேட், ராயபுரம் மற்றும் அடையாறு போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.
பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் வளமான நிலத்தடி நீர்மட்ட அளவை கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 3.46 மீட்டர் உயர்ந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 1,070,64 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் விநியோகம் செய்கிறது. அதில், 1,023,50 மில்லியன் குடிநீரை உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் வழங்குகிறது. ஒரு சில பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது.
இதையும் படிக்க: கர்நாடகாவில் வறட்சி! தண்ணீர் பற்றாக்குறையால் நிலைகுலைந்த பெங்களூரு - காங்கிரஸ் அரசு எடுத்த முடிவு!