Governor Thamizhisai : ரூ.60 லட்சம் செலவில், தாவரவியல் பூங்காவை புனரமைக்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உத்தரவு
ரூ.60 லட்சம் செலவில் தாவரவியல் பூங்கா அழகுபடுத்தப்பட உள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ரூ.60 லட்சம் செலவில் தாவரவியல் பூங்கா அழகுப்படுத்தப்பட உள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தாவரவியல் பூங்கா புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை தாவரவியல் பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் உள்ள செடிகள், மரங்களை அவர் பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள சிறுவர்கள் உல்லாச ரெயிலில் சிறுவர்களுடன் பயணம் செய்து மகிழ்ந்தார். இந்த ஆய்வின்போது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் சிவராமன், துணை இயக்குனர்கள் சண்முகவேல், செழியன்பாபு, கோவிந்தராஜ், இணை இயக்குனர்கள் தனசேகரன், ஜாகீர் உசேன் மற்றும் ஸ்மார்ட் சிட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் செலவில் தாவரவியல் பூங்கா அழகுப்படுத்தப்பட உள்ளது. சிறுவர் உல்லாச ரெயில் நவீனமயமாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பூங்காவை சுற்றிபார்க்க பேட்டரி கார் வசதி செய்யப்படும். கூடுதல் கழிப்பிடமும் கட்டப்பட உள்ளது. பூங்காவில் சேதமடைந்துள்ள பாரத மாதா சிலைக்கு பதிலாக புதிய சிலை வைக்கப்படும். மீன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட உள்ளது. புதுவையில் உள்ள பல்வேறு பூங்காக்களும் சீரமைக்கப்பட உள்ளன. திரைப்பட நகரம் புதுவையில் திரைப்பட நகரம் அமைக்க திட்டம் உள்ளது.
மிக விரைவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும். தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி பிப்ரவரி மாதம் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக அது நடத்தப்படவில்லை. மாடி தோட்டம், வீட்டு தோட்டத்தை ஊக்குப்படுத்தும் வகையில் தோட்ட திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள விலங்குகள், பறவைகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது புதுச்சேரி மாநில துணை வன பாதுகாவலர் வஞ்சுளவல்லி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்