பொங்கல் பரிசுகள் தொடர்பான புகார்கள் : தரக்கட்டுப்பாட்டு மேலாளர் இடைநீக்கம்...
பொங்கல் பரிசுகள் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு,வெள்ளம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் பையுடன் இருபது பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகை வழங்கிட உத்தரவிட்டு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை மிக விரிவாக விசாரணை செய்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடைபெற்றிருந்த நிலையில், மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் அரசுக்கு வரப்பெற்றன. இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை எனவும், 21 பொருட்கள் வழங்காமல் பல இடங்களில் தரப்படும் பொருட்களின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவும் பிறப்பித்திருந்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்