ABP Nadu Exclusive: தலைமை செயலகமாகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை? மீண்டும் வைக்கப்பட்டது அகற்றப்பட்ட கல்வெட்டு!
கருணாநிதி விருப்பப்படி ஓமந்தூரார் மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் மீண்டும் தலைமைச் செயலகம் அமைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றே தெரிகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்த அன்றைய முதல்வர் கருணாநிதி, கடந்த 2007 ம் ஆண்டு அதற்கான இடம் தேர்வு செய்தார். அதுமட்டுமின்றி பணிகம் துரிதமாக தொடங்கி, 2010 ஜூலை 13ல் அதற்கான திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய பிரதமரான மன்மோகன்சிங் பங்கேற்று ,புதிய தலைமை செயலக கட்டடத்தை திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அந்த நிகழ்வில் பங்கேற்றார். 1000 கோடி ரூபாய் செலவில் அக்கட்டடத்தை கட்ட திட்டமிட்டு, 581.80 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் நிறைவு பெற்றது. திறப்பு விழாவிற்கு பின் நடந்த தேர்தலில் 2011ல் அதிமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. முதல்வராக பதவியேற்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 2011 ஆக., 19ல் நடந்த சட்டமன்ற அமைச்சரவை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட புதிய சட்டமன்ற கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமவையாக மாற்ற முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றது.
அதன்படி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை என்கிற பெயரில், அந்த கட்டடம் உடனடியாக மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி கருணாநிதி, மன்மோகன், சோனியா பங்கேற்று திறப்பு விழா நடத்தப்பட்ட நிகழ்வின் போது வைக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக அதன் அருகில் பல்நோக்கு மருத்துவமனையை ஜெயலலிதா திறந்து வைத்ததற்கான கல்வெட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டது. அதன் பின் தொடர்ந்து இரு முறை அதிமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்ததால், ஓமந்தூரார் மருத்துவமனை இன்னும் பல மேம்பாடுகளை அடைந்தது.
இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பில் உள்ளது. முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது செயல்படுத்தி முடங்கிய திட்டங்கள் பலவற்றை, தற்போதைய முதல்வரும் அவரது மகனுமான ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் தான் சற்று முன் ஓமந்தூரார் மருத்துவமனையில் அகற்றப்பட்ட கருணாநிதி-மன்மோகன்-சோனியா பங்கேற்ற திறப்பு விழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு குழுவினர் ஓமந்தூரார் மருத்துவமனை வந்த, அவசரம் அவசரமாக கல்வெட்டை அங்கு வைத்தனர். புதிய தலைமைச் செயலகம் என்கிற பெயரில் அதே கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது, மீண்டும் புதிய தலைமைச் செயலகம் அங்கு வரக்கூடும் எனத்தெரிகிறது. இது தொடர்பாக அப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛கல்வெட்டை வைக்க எங்களுக்கு உத்தரவு வந்தது. அதன்படி தற்போது கல்வெட்டு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது,’ என்றனர்.
கருணாநிதி விருப்பப்படி ஓமந்தூரார் மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் மீண்டும் தலைமைச் செயலகம் அமைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றே தெரிகிறது. இருப்பினும் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.