அதிநவீன ட்ரோன் உற்பத்தி மையம்.. சென்னையில் 35,000 சதுர அடி பரப்பளவில் அசத்துதே.. இத்தனை அம்சங்களா!
சென்னையில் 35,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கருடா ஏரோஸ்பேஸின் அதிநவீன வேளாண் ட்ரோன் உள்நாட்டு உற்பத்திக்கான மையத்தை மத்திய இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய வேளாண்-ட்ரோன் உள்நாட்டு உற்பத்தி மையத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான் இன்று தொடங்கி வைத்தார். அத்துடன், 300 உயர் திறன் சிறப்பு மையங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
வேளாண்-ட்ரோன் உற்பத்தி மையம் - Garuda Aerospace's Agri-Drone Facility
விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ ஒப்புதல் அளித்த, கருடா ஏரோஸ்பேஸின் பயிற்சியாளர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய இணையமைச்சர் மலேஷ் பாஸ்வான், ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்தியாவை உலகளாவிய ட்ரோன் உற்பத்தி மையமாக மாற்றுவது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைகளில் ஒன்று என அவர் கூறினார். பின்னர், கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் பேசுகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் ட்ரோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்றார்.
சென்னையில் 35,000 சதுர அடி பரப்பளவில் அசத்துதே:
இந்த நிறுவனம் இதுவரை வரை 4,000 ட்ரோன்களை உற்பத்தி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 35,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கருடா ஏரோஸ்பேஸின் அதிநவீன வேளாண் ட்ரோன் உள்நாட்டு உற்பத்திக்கான வசதி, மேம்பட்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளின் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனைக்கான மையமாகும் என்றார்.
நேரடி செயல்விளக்கத்தின் போது, ட்ரோன் செயல்பாடுகளில் பயிற்சி பெற்ற பெண்கள் குழுவான "ட்ரோன் டிடிஸ்", வளாகத்திற்குள் வேளாண் ட்ரோன்களை இயக்கி, பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர் கண்காணிப்பு மற்றும் துல்லியமான விவசாயம் போன்ற செயல்பாடுகளில் அவற்றின் பயன்பாட்டை எடுத்துரைத்தனர்.
இத்தனை அம்சங்களா? - Drone Facility Features
வேளாண் தொழில்நுட்பத்தில் பெண்களின் அதிகரித்து வரும் பங்கேற்பு மற்றும் பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், உள்ளீட்டு செலவுகளைக் குறைத்தல் மற்றும் வடகிழக்கு போன்ற மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்ப்பதில் ட்ரோன் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதை இந்தக் கண்காட்சி சுட்டிக்காட்டியது.
மறுபுறம், பயிற்சித் திட்டமும் கருடா ஏரோஸ்பேஸின் முதன்மையான முயற்சியாகும். இது கல்வியாளர்கள், நிபுணர்களை சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயிற்றுனர்களாக மாற்றும். இந்தியா முழுவதும் 300 உயர் திறன் சிறப்பு மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து, வலுவான கட்டமைப்பு மூலம் ட்ரோன் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டை மேம்படுத்தும்.





















