(Source: ECI/ABP News/ABP Majha)
ஒன்றல்ல..இரண்டல்ல...பதினைந்து! - தமிழ்நாட்டின் நீட் மரணங்கள்..
தமிழ்நாட்டில் மட்டுமே நீட் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் அதனை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தும் ஒரே மாநிலமும் தமிழ்நாடுதான்.
வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையாக 253 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்னும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உடைய தமிழ்நாட்டில்தான் அதே மருத்துவப் படிப்பு என்னும் கனவு நிறைவேறாமல் போவதால் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகமும் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு 2017ல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்ததில் இருந்து ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 15 நீட் மரணங்கள் இதுவரை நிகழ்ந்துள்ளன. அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த நீட் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. மற்ற மாநிலங்கள் அனைத்தும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் அதனை ரத்து செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் ஒரே மாநிலமும் தமிழ்நாடுதான். நீட் தேர்வு ரத்துச் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் மீண்டும் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. தற்கொலைகள் தவறு, ஆயிரம் இருந்தாலும் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது போன்ற தர்க்கங்களுக்கு நடுவே மருத்துவக் கனவுக்காக உயிரையே மாய்த்துக்கொண்ட இந்தப் பிஞ்சு முகங்களை நாம் நினைவில் நிறுத்தவேண்டியது அவசியமாகிறது.
அனிதா, அரியலூர்
2017ம் ஆண்டு நீட் தேர்வால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட 17 வயது சிறுமி அனிதாவின் மரணம்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே நீட் தேர்வு என்றால் என்னவென்று கவனிக்க வைத்தது. தான் மட்டுமல்ல தன்னைபோன்று வேறு எந்த மாணவரின் மருத்துவக் கனவும் நீட் தேர்வினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றவர் அனிதா.12ம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஒருவேளை மருத்துவக் கனவு நிறைவேறியிருந்தால் தனது குழுமூர் கிராமத்தின் முதல் பெண் மருத்துவராகியிருப்பார் அனிதா.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
பிரதீபா, விழுப்புரம்
நீட் தேர்வுக்காகத் தமிழ்நாடு பறிகொடுத்த இரண்டாவது உயிர் பிரதீபா. இரண்டு முறை நீட் தேர்வு எழுதியவர். செஞ்சியை சேர்ந்த பிரதீபா முதல்முறை எழுதிய நீட் தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அந்த மதிப்பெண்ணுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைத்திருக்கும் ஆனால் கூலி வேலை செய்யும் பெற்றோர்களால் கோடிகளில் எப்படிப் பணம் செலுத்தமுடியும்?.அதனால் அரசு மருத்துவக்கல்லூரியில் எப்படியும் சேர்ந்துவிடவேண்டும் என்று 2018ல் இரண்டாவது முறை தேர்வு எழுதினார். வெறும் 39 மதிப்பெண்கள்தான் கிடைத்தது. த்மிழ்மொழியில் நீட் தேர்வு எழுதியதில் அதில் நான்கு கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்கு மதிப்பெண் தரும்படி தேர்வுத்துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதிலும் எதுவும் பயனில்லை. ‘எத்தனை முறைதான் நான் தோல்வியைத் தாங்குவேன் அப்பா’ எனக் கைப்படக் கடிதம் எழுதிவைத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
சுபஸ்ரீ, திருச்சி
பிரதீபாவின் மரணம் நிகழ்ந்த ஒரு வாரத்தில் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீயும் நீட் தேர்வு தோல்வியால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். திருச்சியின் பிரபல மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். நீட் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் 24. ‘ஒருவாரமா எம்பொண்ணு மன உளைச்சலோடையே இருந்தா. ஆனா இந்த முடிவை எடுப்பானு எதிர்பார்க்கலை’ எனக் கதறி அழுதார் அவருடைய அம்மா.
ஏஞ்சலின், சென்னை
சென்னையில் சோலையூரை சேர்ந்தவர். சேலையூரில் நீட் தேர்வு எழுதி போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவ துறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் சென்னையில் பொறியியல் சேர்ந்துள்ளார்.இசிஇ சேர்ந்த பிறகு, மூன்று மாதங்களாக மருத்துவப் படிப்பு கிடைக்காத மன உளைச்சலில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஹரிஷ்மா, புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் டி.களபத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா நீட் தேர்வு எழுத ஹால்டிக்கேட் தனக்கு வரவில்லை என்பதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்டவர்.
2019ல் நடந்த நீட் தேர்வு இரண்டு நாட்களில் மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்திருந்தது.
மோனிஷா, விழுப்புரம்
‘நீட் தேர்வில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். நான் வாழத்தகுதியற்றவள். மிஸ் யூ அப்பா, அம்மா’ என துண்டுச் சீட்டில் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா.
வைஸ்யா, பட்டுக்கோட்டை
பட்டுகோட்டையைச் சேர்ந்த மீன் வியாபாரியின் மகள் 17 வயது வைஸ்யா.நீட் தேர்வு எழுதிவிட்டு எல்லோரையும் போல் தானும் மதிப்பெண் முடிவுகளுக்காகக் காத்திருந்தார். தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண், தோல்வி அடைந்த துக்கம் தாங்கமுடியாமல் உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு இறந்துபோனார் வைஸ்யா.
ரிதுஸ்ரீ, தேனி
திருப்பூர் மாவட்டம் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்யும் தனது அம்மாவுடன் தங்கி படித்து வந்தார் 18 வயது ரிதுஸ்ரீ. பன்னிரெண்டாம் வகுப்பில் 500க்கு 490 நல்ல மதிப்பெண். டாக்டர் கனவுடன் நீட் தேர்வும் எழுதியிருந்தார். மதிப்பெண் பட்டியல் வெளியான தினத்தன்று பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் ரிதுஸ்ரீ. வேலை முடிந்து மாலை வீடுதிரும்பிய ரிதுஸ்ரீயின் பெற்றோர் தங்களது மகளின் நீட் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்ள ஆவலாக வீட்டுக் கதவைத் திறந்துள்ளனர். உள்ளே பிணமாகத் தொங்கியிருந்திருக்கிறார் ரிதுஸ்ரீ. நீட் தேர்வில் தோல்வி அடைந்தது தாங்கமுடியாமல் அவர் அந்த முடிவை எடுத்தார்.
ஜோதிஸ்ரீதுர்கா - ஆதித்யா - மோதிலால்
2020 கொரோனா மரணங்களுக்கு நடுவே நீட் தேர்வுக்காக நாம் ஐந்து உயிர்களைப் பறிகொடுத்திருந்தோம். அதுவும் ஒரே வாரத்தில் நான்கு பேர் நீட் தேர்வு பயத்தால் தங்களது முடிவைத் தேடிக்கொண்டனர். இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், மதுரையை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரியை சேர்ந்த ஆதித்யா ஆகிய மூவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். ஆதித்யாவின் அப்பா பழைய இரும்பு வணிகம் செய்பவர். ஜோதிஸ்ரீ துர்கா இறுதியாகத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? ‘அப்பா நான் சோர்ந்து போய்விட்டேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். பிள்ளைகள் கொண்டாட்டமாகப் படிக்க வேண்டிய கல்வி அவர்களைச் சோர்வடையச் செய்து சாகடிக்குமெனில் அது கல்விதானா என்பதை நாம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.
விக்னேஷ், அரியலூர்
நீட் தேர்வுக்காக அனிதாவை இழந்ததையே ஏற்றுகொள்ளமுடியாமல் தவித்த அரியலூர் அடுத்த மூன்றே ஆண்டுகளில் விவசாயத்தொழிலாளியின் மகனான விக்னேஷையும் பறிகொடுத்திருந்தது. 19 வயதான விக்னேஷ் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டிருந்தார். பயிற்சி கொடுத்த மன அழுத்தம் தாங்கமுடியாமல் தற்கொலை முடிவை எட்டியிருந்தார் அவர்.
சுபஸ்ரீ, கோயம்புத்தூர்
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்துவந்தார் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சுபஸ்ரீ. முதல்முறை பல்மருத்துவத்துக்காக நீட் தேர்வு எழுதியவர் தோல்வி அடைந்துள்ளார். இரண்டாம் முறை நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் எங்கே இந்த முறையும் எங்கே தான் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தனைக்கும் சுபஸ்ரீ தனியார் கோச்சிங் செண்டர் ஒன்றில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற்று வந்துள்ளார்.
தனுஷ், சேலம்
நாடு முழுவதும் நேற்று முன்தினம் மதியம் நீட் தேர்வு நடக்க இருந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் கூழையுர் என்ற கிராமத்தில் தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 19
வயது தனுஷ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியவர். எங்கே மூன்றாவது முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ மருத்துவக் கனவு முடிந்துவிடுமோ என்கிற பயத்தில் அவர் தனது வாழ்வையே முடித்துக்கொண்டுள்ளார்.
கனிமொழி, அரியலூர்
கனிமொழியின் இறப்போடு அரியலூர் மட்டும் இதுவரை மூன்று மாணவர்களை நீட் தேர்வால் இழந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கனிமொழி 12-ம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் தேர்வு எழுதி முடித்த பிறகு, வீட்டிற்கு வந்த கனிமொழி தனது தந்தையுடன் பேசியுள்ளார். பின்னர், நேற்று மாலை யாரும் எதிர்பாராத விதமாக திடீரெனத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050