நேதாஜி படைப்பிரிவில் பணியாற்றிய அஞ்சலை பொன்னுசாமி மறைவு - தலைவர்கள் இரங்கல்
நேதாஜி ராணுவத்தில் ஜான்சிராணி படைப்பிரிவில் பணியாற்றியவர் அஞ்சலை பொன்னுசாமி.
தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி மலேசியாவால் காலமானார்.
கடந்த 1943 ஆம் ஆண்டு நடைபெற்ற 2 ஆம் உலகப்போரின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி படைப்பிரிவில் பணியாற்றியவர் அஞ்சலை பொன்னுசாமி. 1920 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்த அவர் துப்பாக்கி உட்பட பல்வேறு ஆயுதங்களை திறமையாக கையாள்பவர்.
போருக்குப் பின் மீண்டும் மலேசியா திரும்பிய அவர் தனது 102 வது வயதில் நேற்று முன்தினம் (மே 31) அங்குள்ள செந்துல் நகரில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்குகள் நடைபெற்று இன்று தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மலேசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஐஎன்ஏ வீராங்கனை அஞ்சலை பொன்னுசாமி அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியத்தையும் ஊக்கமளிக்கும் பங்கையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Anguished by the passing away of the distinguished INA Veteran from Malaysia Anjalai Ponnusamy Ji. We will always remember her courage and inspiring role in India’s freedom movement. Condolences to her family and friends.
— Narendra Modi (@narendramodi) June 1, 2022
இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில், ராணி ஜான்சி படைப்பிரிவின் இந்திய தேசிய ராணுவ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின் மறைவுக்கு ஆளுநர் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் செய்த தியாகங்களுக்கு தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என கூறியுள்ளார்.
இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/OO4SWwxXkV
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 2, 2022
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வீரம், மன உறுதி, துணிச்சல் என பெண்குலத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் அஞ்சலையம்மாள்; அவரது தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்” என தெரிவித்துள்ளார்.