Fengal Cyclone: அடாத மழையிலும் அடங்காத ‘’குடி’’மகன்கள்: சென்னை புளியந்தோப்பில் அட்டகாசம்!
குடிமகன்கள் தங்களின் உயிரோடு, பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொட்டும் கனமழைக்கு நடுவில், வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதை விடுத்து, குடிமகன்கள் டாஸ்மாக்கில் குவிந்துள்ளனர்.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தொடர்ந்து பெய்துவரும் கன மழை
ஃபெஞ்சல் புயல் சென்னை, மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்க ஆரம்பித்துள்ளது.
சென்னையில் 134 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 1,600 மோட்டார் பம்புகள் கொண்டு முக்கிய இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. முக்கிய சாலைகள், அதாவது ஓஎம்ஆர், மயிலாப்பூர் சாலை, ஐந்து ஃபர்லாந்து சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்ணா மேம்பாலம், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களிலும் தண்ணீர் குளம்போலத் தேங்கியுள்ளது.
முழு வீச்சில் இயங்கும் ஊழியர்கள்
சென்னையில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை 5 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின்சார வாரியமும் முழு வீச்சில் இயங்கி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா உணவகத்தில் இன்று முழுவதும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் முழங்கால் வரை தேங்கி உள்ளது. இதனால் மழைக்கு பாதுகாப்பாக வீட்டிலேயே இருப்பதை விடுத்து, குடிமகன்கள் டாஸ்மாக்கில் குவிந்துள்ளனர். அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் கொட்டும் மழையிலும் உயிரைக் கொடுத்துப் பணியாற்றி வரும் சூழலில், குடிமகன்கள் தங்களின் உயிரோடு, பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு இத்தகைய பேரிடர்க் காலங்களில் டாஸ்மாக்கைத் திறக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.