கன்னியாகுமரி : ரப்பர் தொழிலில் ஏற்பட்ட அமோக வளர்ச்சி , விவசாயிகள் மகிழ்ச்சி..!
தரமான ரப்பர் ஷீட் கிலோவுக்கு ரூ. 165 வரை விற்கப்படுகிறது. இதனால், ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் - இயற்கை தனது அழகு மொத்தமும் போர்வை கொண்டு போர்த்தியது போல இயற்கையோடு ஒட்டி உள்ள மாவட்டம்தான் கன்னியாகுமரி மாவட்டம் .
இங்குள்ள மக்களின் பெரும்பாலான வீடுகளில் ரப்பர் மரம் எளிதாக வளர்கிறது . காரணம் இங்குள்ள மண் வளம் தான் முக்கிய காரணம் மேலும் குளிர்ச்சியான சூழலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது . இங்குள்ள செம்மண் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், மரங்கள் செழிப்பாக வளர உதவுகிறது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலைக்கடை , அருமனை , திருவட்டார் , குலசேகரம் , திற்பரப்பு , ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா சூழல் முடிந்து தற்போது அணைத்து வியாபாரமும் சராசரி நிலையை எட்டியுள்ள நிலையில் ரப்பர் தொழிலும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது
குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு மற்றும் தோவாளை தாலுகாவின் சில பகுதிகளில் ரப்பர் பெருமளவில் பயிரிடப்படுகிறது. இங்கு சுமார் 6,000 ஹெக்டர் பரப்பில் அரசு ரப்பர் தோட்டங்களும், 22,000 ஹெக்டர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும் உள்ளன. குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் ஷீட்டுகளுக்கு உலக மார்க்கெட்டில் அதிக வரவேற்பு உள்ளது.
இங்கு ரப்பர் பால் வடிப்பு செய்தல், ரப்பர் நர்சரி, புகையறையில் ரப்பர் ஷீட் உலர்த்துதல், ரப்பர் ஷீட் வியாபாரம் என ஏராளமானோர் ரப்பரை நம்பியே உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரப்பர் ஷீட்டின் விலை கணிசமாக குறைந்து வந்தது. கடந்த ஆண்டு கிலோ ரூ.120 க்கும் கீழே சென்றது. இதனால், சிறு, குறு ரப்பர் விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தவித்தனர்.