தேர்வு முடிவுகளில் குளறுபடி.. அழுத்தத்தில் மாணவர்கள்.. அண்ணா பல்கலைக்கழகத்தின் விளக்கம் என்ன?
செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினர்.
ஆன்லைன் செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொறியியல் மாணவர்கள் தவித்து வரும் நிலையில், முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி அண்ணா பல்கலைக்கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டிருக்கவேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினர்.
இந்நிலையில், பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்பு களில் 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 11-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே Pass, Fail குறிப்பிடாமல் ‘நிறுத்திவைப்பு’ என்பதை குறிக்கும்விதமாக WH (With held) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர், “தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறியப்பட்ட 30 ஆயிரம் மாணவர்கள் மற்றும் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு லட்சம் மாணவர்கள் தவிர, மீதமுள்ள மாணவர்களில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகைய தேர்வு முடிவுகள் இதுவரை வெளியானதை நாங்கள் பார்த்ததில்லை. நன்றாக படிக்கும் மாணவர்களும் கூட தேர்ச்சி பெறவில்லை.
காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுவந்த மாணவி ஒருவருக்கு, நான்கு பாடங்களில் தோல்வி என முடிவு வந்ததால், மனமுடைந்து அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறையிடம் முறையான விளக்கம் கிடைக்கவில்லை. தேர்வு முடிவு மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்வு முடிவுகள் குறித்த குளறுபடிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.