EPS Criticize DMK Govt.: “திராவிட மாடல் என்ற ஏமாற்று மாடல்“; திமுக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலான நிலையில், கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கலான நிலையில், கூட்டம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக அரசை கடுமையாக சாடிய அவர், திராவிடமாடல் என்ற ஏமாற்று மாடல் என விமர்சித்தார். அவரது பேச்சு குறித்து இப்போது பார்க்கலாம்.
“ஏமாற்று மாடல் திமுக அரசு“ - எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த திராவிட மாடல் அரசு என்ற பெயரால் நடத்தப்பட்டுவந்த ஏமாற்று மாடல் திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்துள்ளது என விமர்சித்தார்.
இந்த அரசு மக்களை எந்த அளவிற்கு ஏமாற்றுகிறது என்பதை குறிக்கும் விதமாகவே, இன்று காலை மாபெரும் காதுகுத்து அழைப்பிதழை வழங்கினோம் என கூறிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டதாகவும், அதில் இதுவரை 4-ல் ஒரு பங்கு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், அதில் முக்கியமான பல அறிவிப்புகளாக, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு, அதற்கு மாற்றாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தையே அறிவித்துள்ளது என்றும் இதன் மூலம் அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“பல்வேறு உறுதிமொழிகளை கொடுத்த எதையுமே நிறைவேற்றவில்லை“
அதேபோல், பல துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை கொடுத்து அதையும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். உதாரணமாக, சத்துணவு ஊழியர்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு, செவிலியர்களுக்கு, விவசாயிகளுக்கு என்று இப்படி பல துறையில் இருக்கும் அலுவலர்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாததால், தமிழகம் இன்று போராட்ட களமாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
“நான் பேசும்போது மட்டும் ‘லிங்க்‘ கொடுக்க மாட்டார்கள்“
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தான் பேசும்போதோ, கேள்வி கேட்கும் போதோ அது ஒளிபரப்பப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார். தான் கேட்பது என்ன கேள்வி என்று தெரிந்தால் தான், அதற்கு அவர்கள் சரியான பதில் கூறுகிறார்களா என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால், தன்னுடைய உரை வரும்போது மட்டும் ‘லிங்க்‘கை பிடுங்கிவிடுகிறார்கள் என்று விமர்சித்தார். மேலும், சட்டமன்றம் தொடங்கி நீதிமன்றம் வரை சென்றும், இதற்கு எந்த தீர்வும் இன்னும் எட்டப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.
“மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்“
தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசிடம் கோரிக்கை விடுத்து நடைபெறும் போராட்டங்கள் பற்றியோ, விவசாயிகளைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாத ஒரே அரசு திமுக அரசு தான் என்ற விமர்சித்தார்.
இந்த சட்டமன்ற கூட்டத் தொடரோடு, திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள மிகப் பெரிய, வலுவான கூட்டணி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
ட்ரெண்டிங் செய்திகள்





















