எஸ்.பி.வேலுமணி வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!
கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணி வீட்டில் நடந்த 11 மணி நேர சோதனையில், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி கைப்பற்றப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதியன்று எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் சகோதாரர் அன்பரசன் வீடு, கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் வீடு, வடவள்ளி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கே.சி.பி. இன்ஜினியரிங் நிறுவனத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். அதிகளவிலான டெண்டர்கள் விதிமுறைகளை மீறி முறைகேடாக இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், எஸ்.பி.வேலுமணி அதிகார துஷ்ப்ரயோகம் செய்து இந்நிறுவனத்திற்கு டெண்டர்களை வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதியன்று இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த 11 மணி நேர சோதனையில், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவி கைப்பற்றப்பட்டது. இந்த சாவியை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி குனியமுத்தூர் பகுதியில் எஸ்.பி.வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர். சென்னையில் இருந்து வந்த இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு பெட்டக சாவியின் அடிப்படையில், வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது வங்கி கணக்கு மற்றும் பாதுகாப்பு பெட்டகம் குறித்த ஆவணங்களை பெற்றதோடு, பாதுகாப்பு பெட்டகம் எப்போது கடைசியாக திறக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்தும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.