விழுப்புரம்: ஆம்னி பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது - அதிர்ச்சி தகவல்!
கேராளாவில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கேரளாவை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுனர் கைது.

விழுப்புரம்: கேரளாவில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுனரை விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
கேரளாவிலிருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பெண் ஒருவர் தனது 9 வயது மகளுடன் பயணம் செய்துள்ளார். பேருந்தானது சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வந்தபோது அந்த பேருந்தின் மாற்று ஓட்டுனர் அந்த பேருந்தில் பயணித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ஓட்டுனரிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தார்.
அதனை தொடர்ந்து சிறுமியின் தாய் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காவல்துறைக்கு புகார் கொடுத்ததை அடுத்து பேருந்தை விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து மகளிர் போலீசார் புகார்தாரர் பெண்ணிடமும், விசாரனை செய்து பேருந்து ஓட்டுனர் ஞானவேல்(40) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து செய்தனர். தனியார் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ சட்டம்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது.
இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.






















