பெரியாரை கண்டு பயம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக கனிமொழி ஆவேசம்! திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம்!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.

திராவிட கழகம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சித்த கனிமொழி
விழா மேடையில் கனிமொழி பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பிரதமர் இருக்கும் மேடையிலேயே, இந்துக்கள் என்று சொல்லத் தயங்கினால், தங்களை பாரதியவாதிகள் அல்லது ஆரியர்கள் என்று அழைத்துக்கொள்ளுமாறு கூறுவதாக திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டார். இந்தக் கருத்தியல் வேறுபாடுதான் திராவிட இயக்கத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையிலான அடிப்படைப் பிரச்சினை என்று அவர் வலியுறுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் படியே, ஆண் என்றால் உயர்வு, பெண் என்றால் தாழ்வு என்று மக்களைப் பிரிப்பதுதான் என்றும், அதன்பிறகுதான் எந்த ஜாதியில் பிறந்தார்கள் எனப் பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய சமூகப் பிரிவினைக்கு வித்திடும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்றும், அதன் கொள்கைகளைத் தெளிவாக விளக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
பெரியாரைப் பார்த்து பயம்
தந்தை பெரியார் அனைத்து மனிதர்களையும் சமமாக மதிக்க வேண்டும் எனப் போராடியவர் என்று குறிப்பிட்ட கனிமொழி, பெரியாரை இழிவுபடுத்துகிறேன் என்ற நினைப்பில் அவரது சிலைக்கு காவி வண்ணம் பூசுபவர்கள் மற்றும் செருப்பு மாலை போடுபவர்கள் குறித்தும் பேசினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பெரியார்தான் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும், எதைப் பார்த்து பயப்படுகிறார்களோ அதைத்தான் அவர்கள் தாக்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரியார் மீது காவி வண்ணம் பூசுவதாலோ, செருப்பு மாலை போடுவதாலோ அவரது கருத்தியல் நிறத்தை மாற்றிவிட முடியாது என்று கூறிய கனிமொழி, மாறாக, இத்தகைய செயல்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு யார் என்பதை உலகிற்கு மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டிருக்கின்றன என்றார். மேலும், ஆர்.எஸ்.எஸ். வீசுகிற ஒற்றைச் செருப்பு மாலைதான் பெரியாரை உலகம் முழுவதும் இருக்கும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சிக்கு யார் காரணம் ?
இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கு அடிப்படை தந்தை பெரியார் தான் என்று கனிமொழி ஆணித்தரமாகக் கூறினார். பக்கத்தில் இருக்கும் எந்த மாநிலமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உயரங்களையும், சிகரங்களையும் பெரிய புரட்சி இல்லாமல், சிந்தனைப் புரட்சியாளர் ஒருவரால் மட்டுமே செயல்படுத்த முடிகிறது என்றால், அதுவே பெரியாரின் வெற்றி என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று பெரியாரின் புகைப்படத்தைத் திறக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்பதையும் அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்கள் படித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற பெரியாரின் கனவு நிறைவேறி, இன்று தமிழ்நாட்டில் 42 சதவீதப் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர் என்றும், இது அதிக அளவு பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நாடாளுமன்றம் வருவது கிடையாது
இந்துத்துவா மற்றும் பிஜேபிக்கு எதிராகப் பேசுபவர்களை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று கூறுவதை அவர் விமர்சித்தார். நாடாளுமன்றத்தைத் தாக்குவதற்கு முற்பட்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் என்றும், இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குவதற்கு முற்பட்டவர்கள் அவர்கள்தான் என்றும் கனிமொழி குற்றம் சாட்டினார். அன்று தொடங்கியதுதான் இன்று வரை தொடர்கிறது என்று கூறிய அவர், தற்போது நாடாளுமன்றமே செயல்படுவது கிடையாது என்றும், பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதே கிடையாது என்றும், இதுதான் அவருக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை என்றும் சாடினார்.
பிம்பங்களை நம்புவதும் மூடநம்பிக்கையே
அறிவியல் பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்று கூறிய கனிமொழி, ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு அடிப்படை அறிவியல் பூர்வமாகப் பேசக்கூடிய சிந்தனை இல்லை என்றார். புராண காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது எனப் பேசிய பிரதமர் ஒருவர்தான் இதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். "நான் சொல்வதைக் கூட கேட்க வேண்டாம், உன் அறிவுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதைக் கேள்" என்று கூறிய ஒரே தலைவர் பெரியார் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். மாநிலத்தில் சில மூடநம்பிக்கைகள் இருப்பதாகவும், குறிப்பாகத் தாமாக உருவாக்கிக் கொள்ளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாகவும் கனிமொழி கூறினார்.
சில பிம்பங்களை நம்பி அதுவே நிஜம் என நம்புவதும் ஒருவிதமான மூடநம்பிக்கை என்றும், பிம்பங்கள் ஒருபோதும் நிஜமாகாது என்றும் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமூக வலைதளங்கள், திரைப்படங்கள் என வரும் செய்திகள் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















