காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறோமா? அப்படியானால் அம்மா உணவகங்கள்? - எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு கேள்வி
தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செயல்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அம்மா கிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, நிருபர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதையடுத்து, நிருபர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,
“ அ.தி.மு.க. எதற்காக பொங்கலுக்கு பணம் கொடுத்தார்கள்? அதற்கு முந்தைய 5 ஆண்டுகால ஆட்சியில் பணம் கொடுக்கவில்லை. கடந்தாண்டு தேர்தல் வந்தது. அதனால் பணம் கொடுத்தார்கள். நாங்கள் அப்படி இல்லை. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரணத் தொகையாக 4 ஆயிரம் தருவோம் என்றோம். முழுமையாக வழங்கியிருக்கிறோம். இப்போது, பொங்கல் பரிசாக தரமான பொருட்கள் வழங்கியுள்ளோம்.
இந்த அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அம்மா மினி கிளினிக் திட்டத்தில் மருத்துவரையும் நியமிக்கவில்லை. கட்டட வாடகையை மட்டும் வைத்துவிட்டு சென்றுவிட்டீர்கள். மருத்துவரும், செவிலியரும் இல்லாத கட்டிடத்திற்கு மினி கிளினிக். பொது சுகாதார அமைப்பில் பெரும் அக்கறை கொண்டவர் முதல்வர். அரசியல் காரணங்களுக்காக அம்மா மினி கிளினிக்கை மூட வேண்டும் என்றால், அம்மா உணவகங்கள் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது?
அ.தி.மு.க. ஆட்சியில் யாருக்கெல்லாம் நகைக்கடன் கொடுக்கப்பட்டது. இந்த மோசடிகளுக்கு எல்லாம் யார் துணை போயிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் சரிபார்த்து யாரெல்லாம் முறைகேடாக ஈடுபட்டு கடன் பெற்றார்களோ அவர்களை எல்லாம் நீக்கிவிட்டு, தகுதியான சரியான நபருக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும். எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்த பிறகு கூறிய அனைத்தும் பொய்யுரை. முதல்வரின் நல்லாட்சியை நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். இந்த ஆட்சியை பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, சட்டத்தை நிலைநிறுத்துவோம். கோடநாடு விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சட்டப்படி இருக்கும்” எனக் கூறினார்.
மேலும் படிக்க: மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது: கர்நாடகாவில் பதுங்கிய போது கைதானதாக தகவல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்