(Source: ECI/ABP News/ABP Majha)
Phone Tapping: விஸ்வரூபம் எடுத்த ஒட்டு கேட்பு விவகாரம்.. ED, வருமான வரித்துறை மீது திமுக பரபர புகார்!
திமுக வேட்பாளர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக ஒட்டு கேட்பதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
DMK Complaint: நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் ஒட்டு கேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஸ்வரூபம் எடுத்த ஒட்டு கேட்பு விவகாரம்:
தெலங்கானாவில் கே.சி.ஆர் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் போன்களை உளவுத்துறை ஒட்டு கேட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் ஒட்டு கேட்பு விவகாரம் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தேர்தல் வியூகத்தை தெரிந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை உளவுத்துறையை பயன்படுத்தி திமுக அரசு ஒட்டு கேட்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்தது.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசு மீது திமுக சார்பில் இதே புகார் கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக வேட்பாளர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக ஒட்டு கேட்பதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
டெல்லிக்கு பறந்த திமுகவின் புகார் கடிதம்:
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி அளித்துள்ள புகார் கடிதத்தில், "எங்கள் வேட்பாளர்கள், எங்கள் முன்னணி தலைவர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் மொபைல் போன்கள் மத்திய அரசின் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சட்டவிரோதமாக ஒட்டு கேட்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.
தேர்தல் பிரச்சாரத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்புகள் சட்ட விரோதமான மென்பொருளை பயன்படுத்திகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் அதன் பல தீர்ப்புகளில் தனியுரிமை அடிப்படை உரிமை என்றும், சட்டவிரோதமாக தொலைபேசியை ஒட்டுக்கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்றும் கூறியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டியதில்லை.
குடிமக்களின் தனியுரிமையை மீறாமல் இருப்பது அரசின் கடமையாகும். சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்துவோம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயல்களில் உடனடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை நடத்துவது அதன் கடமையாகும்.
அத்தகைய விசாரணையின் தொடக்கத்தையும் அதன் முடிவையும் பகிரங்கப்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். எனவே, திமுக வேட்பாளர்கள் மற்றும் முன்னணித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவது குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Phone Tapping: எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா? தமிழக உளவுத்துறை மீது அதிமுக பரபரப்பு புகார்!