‛ஒத்துக்கோங்க... விட்டுறேன்...’ திமுகவிற்கு கெடு விதிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!
இந்த போராட்டம் மாநில அரசுக்கு எதிராக குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என நடத்துகிறோம் என அண்ணாமலை கூறினார்.

பொய் வாக்குறுதியை கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தோம் என திமுகவினர் ஒத்துக்கொண்டால் போராட்டத்தினை நிறுத்திக்கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது போன்று தமிழ்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியினர் இணைந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கராத்தே தியாகராஜன் மற்றும் கரு நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
100க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உங்களால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றால், அதன் மூலம் வரும 30 ரூபாய் வருமானம் எதற்காக? எனவும், தமிழ்நாடு அரசுக்கு அக்கறை இருப்பது டாஸ்மாக் மீது மட்டுமே தவிர தமிழ்நாடு மக்கள் மீது அல்ல என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த போராட்டம் மாநில அரசுக்கு எதிராக குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என நடத்துகிறோம் என கூறினார்.
இப்போது குறைக்கவில்லை என்றால் அவர் தேர்தலின் போது பேசிய பேச்சுக்கும், வாக்கு போட்ட மக்களுக்கும் என்ன மரியாதை. தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு நிதி துறை அமைச்சர் 3 பக்கத்திற்கு படத்தின் கதையை எழுதியுள்ளார் என விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதி இல்லாத பிற மாநிலங்களில் பெட்ரோல் விலையை குறைத்துள்ளார்கள். நீங்கள் பொய் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் போராட்டத்தினை நிறுத்திக்கொள்கிறோம் என கூறினார்.
அமெரிக்க பெண்கள் இந்தியாவிற்கு தனியாக சுற்றுலா செல்ல வேண்டாம் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்கா இதை பற்றி பேச தகுதி கிடையாது, நியூயார்க் நகரத்தில் தான் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா இதை கூறுவதற்கு முன்னால் கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு கல் வீசக்கூடாது எனவும், இந்தியாவிற்கு அமெரிக்கர்கள் சுற்றுலா வர கூடாது என அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். இந்தியா பெண் தெய்வங்கள் அதிக அளவில் இருக்க கூடிய நாடு என அவர் கூறினார். இந்தியாவில் பெண்களுக்கான குற்றங்கள் நடக்கிறது. ஆனால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.





















