Writer Vennila on Pennycuick : ‘தன் சொத்தை விற்று முல்லை பெரியாறு அணைக் கட்டினாரா பென்னிகுயிக்?’ இல்லை என்கிறார் எழுத்தாளர் வெண்ணிலா..!
'சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம். முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை’
தேனி மாவட்ட எல்லை பகுதியில் கேரளாவுக்கு சொந்தமான நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சையும் சந்தேகங்களும் அணைக் கட்டத் தொடங்கிய நாள் தொடங்கி, இன்று வரை நீண்டு தொடர்கிறது.
அணையை கட்டி முடிக்க பல சிரமங்களை சந்தித்த ஆங்கில பொறியாளர் ஜான் பென்னிகுக், அரசு கொடுத்த நிதி போதுமானதாக இல்லாத நிலையில், இங்கிலாந்து சென்று தனது சொத்துக்களை விற்று, அதன் மூலம் வந்த பணத்தை கொண்டுவந்து அணையை கட்டி முடித்தார் என்று பள்ளி பாடப் புத்தகம் முதல் பல்வேறு இடங்களிலும் இது வரலாறாக பற்றி படர்ந்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டார். அதில் ‘தமிழ்நாடு அரசு சார்பில், முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிகின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நாட்டில் நிறுவப்படும்’ என அறிவித்தார். அதோடு, ஆங்கிலேய அரசின் நிதி உதவி போதாதபோது, தனது குடும்ப சொத்துக்களை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார் எனவும் அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக உழவர்களின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவைப் போற்றுவோம்!
— M.K.Stalin (@mkstalin) January 15, 2022
இங்கிலாந்து நாட்டிலுள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் தமிழக அரசு சார்பில் அவருக்குச் சிலை நிறுவப்படும்! pic.twitter.com/0ntEwIMfA5
ஆனால், இதனை எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான அ.வெண்ணிலா மறுத்துள்ளார். ’பென்னிகுயிக் தனது சொத்துக்களை விற்று அணையை கட்டினார் என்பது கடந்த 25 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அழகிய கற்பனை’ என தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பென்னிகுயிக், சொத்துக்களை விற்று அணை கட்டினார் என்பதைவிட அவரின் தியாகம் இதில் அதிகம். கட்டப்பட்ட அணை ஐந்து முறை வெள்ளத்தில் அடித்துச் சென்ற போதும் தளராத அவர் உறுதி, உடன் பணி செய்தவர்கள் விபத்திலும் நோயிலும் இறந்த தருணங்களைத் தாங்கி நின்ற மனத்துணிவு, பணியாளர்கள் பாதியில் விட்டு ஓடிப்போகும் போதெல்லாம் புதியவர்களை அழைத்து வந்த விடாப்பிடித்தனம் என பென்னியின் வியந்து போற்ற வேண்டிய அருங்குணங்கள் அநேகம் என்று பதிவிட்டுள்ள அ.வெண்ணிலா, பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய செயல் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார் எனவும் ஆதாரப்பூர்வமாக தனது பதிவில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம். முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை என்று குறிப்பிட்டுள்ள வெண்ணிலா, முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுநாள் வரை பென்னிகுயிக் என்றால் தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணையை கட்டியவர் என அறிந்த பலருக்கு அ.வெண்ணிலாவின் பதிவு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், வரலாறு தன் மீது பூசப்படும் கற்பனைகளை அவ்வப்போது உதிர்த்துவிட்டு, உண்மைகளை மட்டுமே ஏந்திக்கொண்டு காலங்களை கடக்கும் என்பது கண்கூடு.