’நர்ஸுங்க இறப்பு எண்ணிக்கை அதிகமாகிட்டு இருக்கு!’ - அரசு கொரோனா வார்டுகளில் என்ன நடக்கிறது?
கடந்த மார்ச் 2020 தொடங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அரசு செவிலியர்களின் எண்ணிக்கை பத்துக்கும் மேல், ஆனால் கொரோனா அல்லாத பிற உடல் உபாதைகள் (Comorbidity) காரணமாக இறந்த செவிலியர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்த தமிழகத்தில் 100 பேர்.
உலக செவிலியர் தினத்துக்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் ஒருவருக்கு வாழ்த்துச் சொல்லப்போக நமக்கு அடுத்தடுத்து கிடைத்தன சில கதிகலங்கவைக்கும் தகவல்கள்.
‘எங்க நர்ஸ் சாமுண்டீஸ்வரி அக்கா ரெண்டு நாள் முன்ன இறந்துட்டாங்க.கொரோனா வார்டு பார்த்தவங்க. ஸ்டாஃப் நர்ஸ்ங்க இறக்கற எண்ணிக்கை அதிகமாகிட்டு இருக்கு. இது எதுவுமே வெளியே தெரியுறது இல்லை. இதுல யாருக்குங்க செவிலியர் தினம் கொண்டாடத் தோனும்’ என்கிறார் அந்தச் செவிலியர்.
‘வெளியே மீடியாவில் எங்களை புகழ்ந்து கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனால் உள்ளே மருத்துவமனையில் நாங்க செத்துட்டு இருக்கோம். எந்நேரமும் எங்க உசுரு போகலாம். இதுதான் உண்மை நிலவரம். உயிர் பயத்தோடதான் இங்க எல்லோரும் இருக்கோம்’ எனச் சொல்லும் அவரது குரலில் கையறுநிலை. பெயர் குறிப்பிட விரும்பாத இந்தச் செவிலியரின் குடும்பத்தில் மட்டும் இதுவரை இவர் வழியாக 28 பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது அதில் 2 பேர் இறந்துள்ளனர். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட 20 நாட்களில் மீண்டும் பணிக்குச் சேர்ந்தவர்.
நர்ஸ் சாமுண்டீஸ்வரியின் கொரோனா மரணம் தமிழ்நாட்டின் முதல் செவிலியர் மரணமல்ல. சரியாக ஒருவருடத்துக்கு முன்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 58 வயதுச் செவிலியர் ஜோன் பிரிஸில்லாவின் மரணம் உங்களுக்கு நினைவிருக்கலாம். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் செவிலியர் கொரோனா மரணம். தன் மகள் மற்றும் மாற்றுத்திறனாளி மகனுடன் தனது இறுதிக்காலத்தைத் திட்டமிட்டிருந்த பிரிஸில்லாவின் எதிர்பாராத மரணம் ஒட்டுமொத்த செவிலியர்களையும் குலை நடுங்கவைத்தது.
’பிரிஸில்லாவுக்குப் பிறகு முதல் அலை காலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் பத்துக்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் இறந்தார்கள். ஆனால் இரண்டாம் அலைக் காலத்தில் ஒரே மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று செவிலியர்கள் இறந்துள்ளார்கள்’ என்கிறார் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வளர்மதி.
’இந்த அடுத்தடுத்த இறப்புகள் தாங்கமுடியாததாக இருக்கிறது. எல்லாருடைய மனதிலும் சேவை மனப்பான்மை இருந்தாலும். தொற்று பாதித்துவிடும் என்கிற பயமும் இருக்கிறது’ என்கிறார் அவர்.அவருக்குக் கிடைத்த தரவுகளின்படி கடந்த மார்ச் 2020 தொடங்கி கொரோனாவால் மரணமடைந்த செவிலியர்களின் எண்ணிக்கை. அதில் சிலரது பெயர்கள் பதிவு செய்யப்படாமலும் விடுபட்டிருக்கின்றன.
ஆனாலும் இந்த எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள் சென்னை அரசு மருத்துவமனைகளின் செவிலியர்கள். செவிலியர்களின் கொரோனா இறப்புகளைப் பதிவு செய்வதில் பிரிஸில்லா மரணம் தொடங்கியே பல குழப்பங்கள் இருந்துவந்தன முதலில் அவருக்குக் கொரோனா நெகடிவ் எனச் சொல்லப்பட்டு பாதித்தவர்கள் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் பாசிடிவ் என உறுதிசெய்யப்பட்டு தொண்டையிலிருந்து எடுக்கப்படும் ஸ்வாப் (Swab) மாதிரிகள் நெகடிவ் என வந்ததால் உண்டான குழப்பம் அது என அப்போது தெளிவுசெய்யப்பட்டது.
நரகம் என்று தெரிந்தே தள்ளப்படும் குழியில் நர்ஸ்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கொரோனா வார்டுகளின் நிதர்சனம்.இதற்குத் தீர்வு என்ன?
அதுபோன்ற குழப்பங்கள் தற்போது ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக செவிலியர் சங்கங்கள் உறுதியளித்தாலும் அவர்களது வாக்குறுதியின் மீதான நம்பகத்தன்மை குறைவானதாகவே இருக்கிறது.காரணம் இதே ஒருவருடத்தில் மட்டும் இதயநோய்,ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட உடல் உபாதைகளால் மரணமடைந்த பிற செவிலியர்களின் எண்ணிக்கைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு முழுக்க 100 பேர் இருக்கும் என்கிறார் வளர்மதி.
மருத்துவமனைகளுக்கும் கொரோனா கேர் செண்டர்களுக்கும் வரும் நோயாளிகளை வரவழைத்து அவர்களுக்குச் சிகிச்சை அளித்துத் திருப்பி அனுப்புவது முழுவதுமே மேட்ரன் (Matron) எனப்படும் மூத்த செவிலியர்கள் இவர்கள் பெரும்பாலும் 50 வயதைக் கடந்தவர்கள் உடல் உபாதைகளுடன் இருப்பவர்கள்.இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அப்படியிருக்க அவர்கள் வெறும் உடல் உபாதைகள் காரணமாகத்தான் இறந்தார்கள் என்பது நம்பமுடியாததாக இருக்கிறது என்கிறார்கள் அரசு செவிலியர்கள்.ஒன்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமலே இறந்திருக்கலாம். இரண்டு பிரிஸில்லா போல அவர்களது பரிசோதனை முடிவுகளிலும் குழப்பம் நேர்ந்திருக்கலாம் என்பதுதான் அவர்களின் வாதம்.
நரகம் என்று தெரிந்தே தள்ளப்படும் குழியில் நர்ஸ்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கொரோனா வார்டுகளின் நிதர்சனம்.இதற்குத் தீர்வு என்ன?
‘இங்கு செவிலியர்கள் பெரும்பாலும் சுழற்சி முறையில்தான் வேலைபார்க்கிறார்கள். ஒரு செவிலியர் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்கிறார்.பிற உடல் உபாதைகள், கொரோனா அறிகுறிகள் என மற்ற செவிலியர்கள் விடுப்பு எடுக்கும்போது சிலர் இந்த 12 மணிநேரத்தையும் கடந்து வேலை செய்யவேண்டியிருக்கிறது. அதனால் அவரது உடலில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ்கள் (High viral load) சேர்ந்துவிடுகின்றன. இதைதான் தவிர்க்கவேண்டும். அதிக எண்ணிக்கையிலான செவிலியர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். இது செவிலியர்களிடம் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும்’ என்கின்றனர் செவிலியர் சங்கத்தினர்.
வெள்ளை உடை தேவதைகளின் வேதனைக்குரல் அரசுக்குக் கேட்குமா?