Chennai Flood: மிதக்கும் சென்னை: 2015 வெள்ளத்தையே மிஞ்சிய 2023 புயல் - இதுதான் காரணம்!
தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அதன் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தைக் காட்டிலும் தற்போது சென்னையில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. இன்னும் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அதன் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மிக்ஜாம் புயலாக மாறி, தற்போது தீவிரப் புயலாகி உள்ளது. இந்த புயலானது சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இதனால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்- புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை
மிக்ஜாம் புயலால் விடிய விடிய பெய்த மழையால், சென்னையில் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அடர்ந்த மேகங்கள் தொடர்ந்து சென்னைக்கு அருகே மேலடுக்கில் நீடிப்பதால், மழை தொடர்ந்து பெய்து வருவதாக வானிலையாளர்கள் கணித்துள்ளனர். சென்னை வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த மழை இன்று (டிச.3) இரவு முழுவதும் அல்லது நாளை காலை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
நிலைமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறும்போது, ’’சென்னை கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சென்னை கடலோரங்களில் புயல் மேகங்களின் மெதுவான நகர்வதால் இன்று மாலை அல்லது இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும். மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கவில்லை என்றாலும்கூட புயலின் தீவிரம் மற்றும் நகரும் வேகம் பொறுத்து கன மழை கொட்டி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆண்டை மிஞ்சிய 2023 புயல்
47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 34 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 2015 பெரு வெள்ளத்தில் 33 செ.மீ. அளவு மட்டுமே மழை பொழிந்த நிலையில், தற்போது மழை அளவு அதைவிட அதிகமாக பெய்துள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், 2015ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முறையே 22, 23 மற்றும் 24 செ.மீ. அளவு மழை பெய்தது. தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி, அதே மாவட்டங்களில் முறையே 27.6 செ.மீ., 25.8 செ.மீ., 33.6 செ.மீ. அளவு மழைப் பொழிவு பதிவானது.
தற்போது 2023-ல் 21 இடங்களில் அதி தீவிர கன மழையும் 59 இடங்களில் தீவிர கன மழையும் 15 இடங்களில் கன மழையும் பதிவாகி உள்ளது.
கொட்டும் கன மழை
அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செ.மீ மழையும், மீனம்பாக்கம் 23 செ.மீ., அடையாறு பகுதியில் 23 செ.மீ., கோடம்பாக்கத்தில் 22 செ.மீ., சோழிங்கநல்லூரில் 21.5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
என்ன காரணம்?
மிக்ஜாம் புயலின் கண் பகுதி நகராமல் இருப்பதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேகங்கள் அதிகம் நகராத நிலையில், மழையின் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் இன்று (டிச.3) இரவு முழுவதும் அல்லது நாளை காலை வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கோரிக்கை விடுத்துள்ளார்.