Cyclone Michaung: வடியும் வெள்ளம்: மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்!
மழை காரணமாக ரயில் போக்குவரத்தும் வான் போக்குவரத்தும் முழுமையாக நேற்று நிறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தைச் சூழ்ந்திருந்த வெள்ள நீர் வடிந்ததை அடுத்து, விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயலால் வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று தொடர்ச்சியாக கன மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன், தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே கடுமையாகத் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பு நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவில் இருந்து படிப்படியாக மழையின் அளவு குறைந்து, இன்று காலையில் இருந்து மழை நின்றுள்ளது. வரலாறு காணாத பெரு மழையால், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழை காரணமாக ரயில் போக்குவரத்தும் வான் போக்குவரத்தும் முழுமையாக நேற்று நிறுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, 6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
விமானங்கள் ரத்து
நேற்று காலை புறப்படுவதாக இருந்த விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10, என மொத்தமாக 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12, மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதமானது.
நேற்று சென்னைக்கு அபுதாபியில் இருந்து வரும் 2 விமானங்கள், துபாயில் இருந்து வரும் 2 விமானங்கள் மற்றும் பக்ரைன், மும்பையில் இருந்து வரும் மொத்தம் 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதைப்போல் சென்னையில் இருந்து துபாய், இலங்கை, விஜயவாடா, ராஜமுந்திரி, கோவை, திருச்சி, கொச்சி செல்லும் 10 புறப்பாடு விமானங்கள், மற்றும் அதே இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 10 விமானங்கள் ஆகிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கிண்டி, மீனம்பாக்கம் முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், விமான நிலைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தைச் சூழ்ந்திருந்த வெள்ள நீர் வடிந்ததை அடுத்து, விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே மெட்ரோ ரயில் சேவை மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், நேற்றில் இருந்து தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.