Cyclone Michaung: ஆட்டம் காட்டிய மிக்ஜாம் புயல்.. சென்னை பெருமழையில் முளைத்த திடீர் கவிஞர்கள்..!
சென்னையில் பெருமழை பெய்யும் போதெல்லாம், பல நவீன திருவள்ளுவர்களும் பாரதிகளும் தோன்றிவிடுவார்கள் என்றால் மிகையில்லை.
சென்னையில் பெருமழை பெய்யும் போதெல்லாம், பல நவீன திருவள்ளுவர்களும் பாரதிகளும் தோன்றிவிடுவார்கள் என்றால் மிகையில்லை. அதுவும் இந்த சமூக வலைதளங்கள் எனும் சோசியல் மீடியா காலத்தில், மீம்ஸ் என்ற பாணியில் கிண்டல், கேலி என விமர்சன கச்சேரி களைக் கட்டினாலும் சில கருத்துகள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோசிக்கவும் வைக்கிறது என்பதும் நிதர்சனம்.
பழையதா, புதியதா எனத்தெரியவில்லை. ஆனால், நேற்று மாலையிலிருந்து இந்த பதிவு பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது. மழைக்காலத்திற்கு ஏற்ற நவீன திருக்குறளைத் தற்போது பார்ப்போம்…
இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வர்
மற்றவரெல்லாம் நீச்சலடித்தே போவார்
ஊரில் கட்டிய வீட்டில் நீர்வடியும்
வடியாதே ஏரியில் கட்டியவீட்டில்
எந்த நிலம் யார்யாரிடம் வாங்கினாலும்
அந் நிலம் நீர்நிலையாயென காண்பதறிவு
ஏரியின் வாழ்வுதனை பிளாட்ஸ்கள் கவ்வும்
இறுதியில் ஏரியே வெல்லும்
போன்றவை வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதுமட்டுமல்ல, மேலும் சில விமர்சன மீம்ஸ்களில், வரப்போகின்ற தேர்தலில், சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், வீட்டுக்கு ஒரு “போட்” கொடுப்போம் என்ற வாக்குறுதிதான் பிரதானமாக இருக்கப் போகிறது என்ற கிண்டல் விமர்சனமும் பரவலாகி வருகிறது.
அதேபோன்று, காவிரியில் உரிய தண்ணீரைத் தராத கர்நாடகாவை கண்டிக்கும்வகையில், வடிவேலு காமெடி ஒன்றைப்பயன்படுத்தி மீம்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது. சாராய கடை ஒனருக்குப் போன் செய்து வடிவேலு கலாய்க்கும் காமெடியைப்போன்று, “ஹலோ கர்நாடகவா, நாங்க தமிழ்நாட்லேர்ந்து பேசறோம்.. எவ்வளவு தண்ணீ வேணும் உங்களுக்கு” என கிண்டல் செய்வது போன்ற மீம்ஸும் சமூக வலைதளத்தில் சக்கைப் போடு போடுகிறது.
சென்னையின் பல இடங்களில் மின்சார வினியோகம், நேற்று முழுவதும் தடைப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து இதுபோன்ற கேலி, கிண்டல், விமர்சனம் என மீம்ஸ்களும், வலைதளப் பதிவுகள் களைக் கட்டின. இதில், பல கருத்துகள், சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.