Vandalur Crocodile: வண்டலூரில் வலம் வந்த முதலை.. எங்கிருந்து, எப்படி வந்தது? - வெளியான புது தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதி சாலையில் முதலை சென்ற விவகாரம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதி சாலையில் முதலை சென்ற விவகாரம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் வட தமிழகம்-புதுச்சேரியை ஒட்டிய இடங்களுக்கு புயல் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்த “மிக்ஜாம்” புயலானது தற்போது தீவிரமடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 90 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல் 8 கி.மீ., வேகத்தில் இந்த புயலானது தீவிரமடைந்துள்ளது.
மேலும் இந்த புயல் வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வண்டலூர் பகுதி சாலையில் முதலை சென்ற வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றத்திலிருந்து பெருங்களத்தூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் போது அங்கு சுமார் ஒன்பது அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று இருப்பதை கண்டனர்.
நெடுங்குன்றம் பகுதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பின்புறம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாகவே முதலைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள முதலையும் அங்கிருந்து வந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நெடுங்குன்றம் ஏரிக்கு முதலில் வந்தது எப்படி?
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பின்புறம் இந்த ஏரி உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் முதலை குட்டிகளை சில பறவைகள் வேட்டையாடுவது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள முதலை குட்டிகள் பறவைகள் தூக்கிச் செல்லும் பொழுது தவறுதலாக அவை நீர் நிலைகளில் விழுவது அவ்வப்பொழுது நடைபெறுகிறது.
அவ்வாறு தூக்கிச் செல்லப்பட்ட முதலை குட்டிகள் தான் நெடுங்குன்றம் ஏரியில் பல்கி பெருகியதாக கூறப்படுகிறது. இப்போது வந்த முதலையும் நெடுங்குன்றம் ஏரி பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது
ஆனால் இந்த முதலைகள் பயந்த சுபாவம் கொண்டவை என்பதாலும் பொதுவாகவே மனிதர்களிடம் இந்த முதலைகள் தள்ளி இருப்பதையே விரும்பும் என வன அலுவலர்கள் கூறுகின்றனர். இந்த முதலைகள் மனிதர்களை தாக்குவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவது கிடையாது எனவும் தெரிவிக்கின்றனர்