Cyber Crime: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என ஆசை.. ரூ.7.03 லட்சம் இழந்த பட்டதாரி வாலிபர்
திண்டிவனம் அருகே பொறியாளரிடம் இணையவழியில் சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் என நம்பி ரூ.7.03 லட்சம் மோசடி.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பொறியாளரிடம் இணையவழியில் ரூ.7.03 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம்?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஊரல் நடுத் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் வினோத்குமார் (31), பொறியாளா். இவரது கைப்பேசி எண்ணுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி அழைப்பு வந்தது. அப்போது, எதிர் முனையிலிருந்து பேசிய மா்ம நபா், பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இணையவழியில் ரூ.7.03 லட்சம் மோசடி
இதையடுத்து, வினோத் குமார் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து ரூ.17,066-ம், ரூ.26,593 செலுத்தி ரூ.37,075-ம் பெற்றுள்ளார். தொடா்ந்து, இதை உண்மையென நம்பிய வினோத் குமார், ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் ரூ.7,03,677ஐ இணையவழியில் முதலீடு செய்தார். பின்னா், மா்ம நபரை தொடா்புகொள்ள முடியவில்லையாம். இதுகுறித்த விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இது சம்பந்தமாக இணைய வழி போலீசார் கூறுகையில்...
இணையதளங்களில் வரும் போலியான உடனடி கடன் பெரும் செயலி விளம்பரங்களை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். மேலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதால் தங்களுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை அவர்கள் திருடி விடுவார்கள். மேலும் அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று பணம் கேட்டு மிரட்டுவார்கள். மேலும் கடந்த ஐந்து நாட்களில் இதுபோன்று 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரித்து வருகின்றனர் என்று பொதுமக்களுக்கு அவர் எச்சரித்துள்ளார். புகார் தெரிவிக்க: 1930 மற்றும் www.cybercrime.gov.in