40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதேபோல 'போலீஸ்' என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒரு 'கில்லாடி' குற்றவாளி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் காவலர் என்று பொய் கூறி, இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றரை பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற காரியக்கார திருடனை காவல் துறையினர் தீவிர விசாரணையில் தட்டி தூக்கி உள்ளனர். பிடிபட்ட நபர் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலையில் நடந்த நாடகம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நாகை நெடுஞ்சாலை பகுதியில், அண்மையில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அவர்கள் அருகே வண்டியை நிறுத்தினார்.
அதிகார தோரணையில் பேசிய அந்த நபர், தான் ஒரு காவலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். "பொது இடத்தில் இப்படி தனியாக நின்று பேசக் கூடாது; உங்களை விசாரிக்க வேண்டும்" என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். மேலும், விசாரிக்க வேண்டும் என்று கூறி, அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை மட்டும் சற்று தொலைவில் அழைத்துச் சென்று தனியாக நிற்க வைத்துள்ளார். "இங்கு இன்னும் சற்று நேரத்தில் உயர் அதிகாரிகள் வருவார்கள், அவர்களிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக்கூறி அவர்களை பதற்றமடையச் செய்துள்ளார்.
அதிகார மிரட்டலும்... நகை பறிப்பும்...
ஆண் நண்பர் தள்ளி நின்ற இடைவெளியைப் பயன்படுத்திய அந்த நபர், தனியாக நின்ற பெண்ணிடம் மீண்டும் வந்து தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். "இப்போது இந்த இடத்திற்கு ஆய்வாளர் (Inspector) அல்லது உதவி ஆய்வாளர் (SI) வரப் போகிறார்கள். அவர்கள் வந்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிடுவார்கள். மேலும், நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்திருந்தால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும்" என்று பயமுறுத்தியுள்ளார்.
"எனவே, உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளைக் கழற்றி தற்காலிகமாக என்னிடம் கொடுங்கள். அதிகாரிகள் சென்றுவிட்ட பிறகு, நான் உங்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து விடுகிறேன்" என்று அந்தப் பெண்ணிடம் நயவஞ்சகமாகப் பேசியுள்ளார். போலி போலீஸ் என்று கூறிய அந்த மர்மநபரின் மிரட்டலுக்குப் பயந்த அந்தப் பெண்ணும், அவர் நிஜமான காவலர் தான் என நம்பி, தான் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளைக் கழற்றி அவரிடம் கொடுத்துள்ளார். நகையைக் கையில் வாங்கிய அடுத்த நொடியே, அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அலறியுள்ளார்.
வலைவீசிய போலீஸ்: சிசிடிவியில் சிக்கிய க்ளூ!
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து உடனடியாக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல் துறையினர், குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளைக் காவல் துறையினர் அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் "போலீஸ்" (Police) என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததும், அதில் வந்த நபர் தான் இந்தத் துணிகர நகைப்பறிப்பில் ஈடுபட்டார் என்பதும் தெரியவந்தது. அந்த வாகன எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போது போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
40 வழக்குகளில் தேடப்பட்ட 'கில்லாடி' சிவராமன்!
காவல்துறையினரின் அதிரடி விசாரணையில், அந்தப் பறிப்பில் ஈடுபட்ட நபர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள சின்ன காப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சி. சிவராமன் (46) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் சாதாரண ஆள் அல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதேபோல 'போலீஸ்' என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒரு 'கில்லாடி' குற்றவாளி என்பது அம்பலமானது. மேலும், இவர் தனது அடையாளத்தை மறைக்கவும், போலீசாரிடம் சிக்காமல் இருக்கவும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது சிவராமன் ஒரு பைக்கில் வந்துள்ளார். அப்புறம் என்ன? தனிப்படை போலீசார் சட்டென்று பிடித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலி போலீஸ் வேடமிட்டு உலா வந்த பழைய குற்றவாளி தஞ்சாவூரில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழி நிரூபணம் ஆகியுள்ளது. பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய நபர் தஞ்சையில் சிக்கிய உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















