CM Stalin Letter To President: அடுத்த அதிரடி.. ஆளுநர் ரவி மீது 15 பக்க புகார், குடியரசு தலைவருக்கு பறந்த முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதம்
ஆளுநர் ரவி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் ரவி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு தலைவருக்கு கடிதம்:
ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் 15 பக்க கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்ட நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆளுநர் தற்போது டெல்லியில் உள்ள சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
செந்தில் பாலாஜி விவகாரம்:
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், ஆளுநர் வலியுறுத்தலையும் மீறி செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என, தனது அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விலக்குவதாக ஆளுநர் அறிவித்தார். இதற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்வினையாற்றின. அதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக வெறும் 5 மணி நேரத்தில் ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானது.
ஆளுநர் உடனான மோதல்:
ஏற்கனவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, திராவிட கருத்துகள், அரசின் செயல்பாடுகள், திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் மற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ரவி இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் இந்த மோதல் உச்சத்தை எட்டிய நிலையில், அரசியலமைப்பு விதிகளை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் டெல்லி பயணம்:
செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யும் முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ஆளுநர், அதுதொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற உள்ளதாக விளக்கமளித்து இருந்தார். அதைதொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக டெல்லி புறப்பட்ட ஆளுநர் ரவி, ஓய்வு எடுக்க அங்கு செல்வதாகவும், ஒருவார காலம் அங்கு தங்கியிருக்க போவதாகவும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல், நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.