
Christmas Special Bus: கிறிஸ்துமஸுக்கு ஊருக்கு போறீங்களா? அரசு கொடுத்த சர்ப்ரைஸ் : 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Christmas Special Bus: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்துகள்:
தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 22 (வெள்ளிக்கிழமை) மற்றும் டிசம்பர் 23ஆம் தேதிகளில் (சனிக்கிழமை) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்:
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து தறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (கோயம்புத்தூர், சேலம் கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) மூலம் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 22/12/2023 அன்று 350 பேருந்துகளும் மற்றும் 23/12/2023 அன்று 290 பேருந்துகளும், ஆக மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

