திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்-அமர்வு தரிசனம், விஐபிகளின் பரிந்துரை கடித தரிசனம் ரத்து
16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் அமர்வு தரிசனமும், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது

பஞ்சபூத ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி மாதந்தோறும் பௌவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கார்த்திகை தீப நாளன்று ஏற்றப்படும் மகாதீப விழாவைப்போலவே சித்ரா பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தற்போது கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கான சித்ரா பௌவுர்ணமி அனுமதி நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய நிலையில் நாளை நள்ளிரவு 1.47 மணிக்கு நிறைவு பெறுகிறது.
வழக்கமாக சித்ரா பௌவுர்ணமி கிரிவலத்திற்கு 16 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எந்தவித இடையூறுமின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதியும் 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு கட்டண தரிசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனமும், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் நடத்து செல்ல வசதியாக நடைபாதைகளில் நிழற்பந்தல்கள், மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோபுரங்களின் நுழைவுவாயிலில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூ லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோர், பானகம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரிவலப்பாதையில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தினால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

