'உங்களால் கருவானேன்; உங்களால் செதுக்கப்பட்டேன்'- தந்தையர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு
உங்களால் கருவானேன்; உங்களால் செதுக்கப்பட்டேன் என்று தந்தையர் தினத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை எண்ணி முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.
உங்களால் கருவானேன்; உங்களால் செதுக்கப்பட்டேன் என்று தந்தையர் தினத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை எண்ணி முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதியான இன்று, உலக அளவில் பல நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினம் உருவான கதை
தந்தையர் தினம் 1910-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறு வயதிலேயே தனது அன்னையை இழந்தவர் அமெரிக்காவை சேர்ந்த சோனோரா லூயிஸ் டோட். சோனோராவையும் அவரது இளைய சகோதரர்களையும் என 14 பேரைத் தனி ஆளாக வளர்த்தார் சோனோராவின் தந்தை. அவர் ஒரு போர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னலம் ஏதுமின்றி தனது குழந்தைகளை பாதுகாத்து வளர்த்தார்.
இந்நிலையில் பிற்காலத்தில் நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் அயராது பாடுபட்ட தனது தந்தை மற்றும் அவரை போன்று குடும்பத்தை கவனிக்கும் தந்தையர்களுக்காக தந்தையர் தினம் என்ற நாளை கொண்டாட விரும்பினார் சோனோரா. அதற்காக தனது தந்தையின் பிறந்த நாளான ஜூன் 5-ஆம் தேதியை உலக தந்தையர் தினமாக கொண்டாட அவர் மனு அளித்தார். ஆனால் ஆரம்ப நிலையில் அந்த மனு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இருப்பினும் சோனோரா உள்ளூர் தேவாலய சமூகங்களை தன்னுடைய இந்த கோரிக்கையில் பங்கேற்கச் செய்தார்.
ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை
பின்னர் அவர்களுடைய மனு ஏற்கப்பட்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாளடைவில் தந்தையர் தினம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாற்றப்பட்டது. அவருடைய முயற்சியால் இன்று உலகின் பல நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியை எண்ணி தந்தையர் தினத்தை முன்னிட்டு, உங்களால் கருவானேன்; உங்களால் செதுக்கப்பட்டேன் என்று நெகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
''உங்களால் கருவானேன்.
உங்களால் செதுக்கப்பட்டேன்.
நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.
உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்.
நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா 2023-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கிண்டியில் உயர் சிறப்பு மருத்துவமனை அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.