புதுச்சேரி விடுதலை நாள் விழா: தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை காவல் துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் காலியாக உள்ள 1,056 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் விடுதலை நாள் விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ரங்கசாமி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் 300 ஆண்டுகள் பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியானது இந்தியா விடுதலை பெற்ற 7 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விடுவிக்கப்பட்டு, இந்திய அரசுடன் இணைந்தது. இதனால் புதுச்சேரி விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி புதுச்சேரி கடற்கடையில் நடைபெறக்கூடிய வண்ணமயமான விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை, தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், கிராமிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர், உள்துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது :-
புதுச்சேரி மாநிலத்தில் நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 37 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் 39 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பு செய்யப்பட்டுள்ளது. நிதி நிலையில் அறிவித்தபடி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 16,769 விண்ணப்பங்கள் பரிசளிக்கப்பட்டு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் அனைத்து உணவு பங்கிட்டு அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 சர்க்கரை இலவசமாக வழங்கப்பட்டது. சாலை வசதி தடையில்லா மின்சாரம் தரமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த திட்டத்திற்கு 7 கோடி ரூபாய் செலவில் திருக்காஞ்சி ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் மற்றும் கோகிலாம்பிகை திருக்காமேஸ்வரர் ஆலயங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை காவல் துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் காலியாக உள்ள 1,056 ஆணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி மட்டுமின்றி புதுச்சேரி பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனம் பகுதிகளில் புதுச்சேரி விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், தலைவர்களின் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் பொது விடுமுறை நாளாகவும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.