CM Mk Stalin: எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? - உறுதியளித்த முதலமைச்சர் முக ஸ்டாலின்!
தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கோ. பாலுவின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எத்தனையோ மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளுக்கு சென்றிருந்தாலும் திருவாரூர் வந்திருப்பது தனி உணர்வு.
தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்.
தாய்மொழியான அழகுத் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர். அத்தகைய தாய் மொழியில் இந்த திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியை தருகிறது.
அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே திமுக அரசு ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. பட்ஜெட் தயாரிக்க கலைஞர் பின்பற்றிய கருத்துக்கேட்பு முறையையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்ற வாக்குறுதி ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றினோம். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் கருத்துகளை கேட்டு அவர்களுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டது." என்று தெரிவித்தார்.