Omni Bus: ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்நாடு அரசு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் ஆம்னி பஸ்கள் புறப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் சுமார் 88 ஏக்கர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதலே சோதனை அடிப்படையில் பேருந்துகள் இயக்கம் செங்கல்பட்டு, விக்கிரவாண்டி வழியாக இயக்கப்படும் தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வந்தது.
இதனிடையே ஜனவரி 30 ஆம் தேதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பயணிகள் சூழலை கருத்தில் கொண்டு 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கோயம்பேட்டில் எந்தவித ஆம்னி பேருந்துகளையும் இயக்கக்கூடாது எனவும், அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால் உடனடியாக அனைத்து பேருந்துகளையும் கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் அனைத்து பேருந்துகளும் வேறு வழியின்றி கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரை கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பயணிகளை இறக்கி ஏற்றவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விடவும் மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழிதட வரைபடங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என தெரிவித்தனர். கோயம்பேடு பேருந்து முனையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் அந்த நடைமுறை தொடரும். மேலும் போரூர், சுரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம் ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. ஆனால் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் எந்த பேருந்துகளையும் இயக்கக்கூடாது என கூறினர்.