Crime : அபராதம் கட்டுங்க! மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து லட்சக்கணக்கில் வசூல்! சிக்கிய இருவர்!
சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்வதாக கூறி அபராதம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில், மிட்டல்லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்கு வந்த 2 பேர், "நாங்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் சுகாதாரத்துறை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள். உங்கள் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்வதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. எனவே, உங்களது நிறுவனத்தில் சோதனை நடத்துவதற்காக வந்துள்ளோம்,” என தெரிவித்துள்ளனர்.
பின்னர், அங்கு சோதனை நடத்தியபோது, தமிழக அரசால் தடை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளது. உடனே, அந்த இருவரும், "தடையை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்த உங்களது கடைக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில் கடையை மூடி சீல் வைத்துவிடுவோம்,” என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆனால், அபராத தொகைக்கான ரசீது எதுவும் அவர்களிடம் கையில் இல்லாததால், சந்தேகமடைந்த கடை உரிமையாளர் மிட்டல் லால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், எஸ் பிளனேடு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் இருவரும் பெரம்பூரை சேர்ந்த 56 வயதான ராஜேந்திரன் மற்றும் 31 வயதான சதீஷ்குமார் என்பதும், இவர்கள் மாநகராட்சியில் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் இருவரும் மாநகராட்சி சுகாதாரத்துறையில் பணி புரிவதாக போலி அடையாள அட்டை தயார் செய்து வணிக நிறுவனங்களில் காண்பித்து, சோதனை செய்வது போல் நடித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்காக அபராதம் விதிப்பதாக பல லட்சம் ரூபாய் வசூல் செய்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் பாரிமுனை, மண்ணடி, கொத்தவால்சாவடி, சவுகார்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ. 4 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இருவரையும் கைது செய்த எஸ்பிளனேடு காவல்துறையினர், அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு உதவிய சாந்தகுமாரி என்பவர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து உள்ளது. இதனால் அவற்றை திருட்டுத்தனமாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். போலியாக மாநகராட்சி பெயரை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்