கொரோனா என்ன ராமர் வில்லா., அப்டியே வளைக்குறதுக்கு? - பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஐந்து மாதங்களுக்கு முன்பே கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டன
இந்திய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ஏபிபி நாடு டிஜிட்டல் தளத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இங்கே:
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?
மத்திய அரசின் செயல்பாடுகள் மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. இரண்டாம் அலை எதிர்பாராத ஒன்றாக மத்திய அரசு சித்தரிக்கிறது. ஆனால், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஐந்து மாதங்களுக்கு முன்பே கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டன. மத்திய அரசு உலகளாவிய பாதிப்பைக் கண்டுகொள்ளவில்லை.
கொரோனா நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் சிரமப்படுவதாகவும், இந்தியா அதில் வெற்றி பெற்று விட்டதாகவும் இவர்களே தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டனர். அதிலும், கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 70 நாட்களுக்கு மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என முழுமையாகத் தடை விதிக்கப்பட்ட்து. எந்த நாட்டிலும் இல்லாத கடுமையான ஊரடங்கு. இதன் சுமை அன்றாட விளிம்புநிலை மக்களின் தலையில்தான் விழுந்தது.
முழு ஊரடங்கு எந்த வகையிலும் நோய்த்தொற்று பரவலலை தடுக்காது. நோய்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தான் முழுஊரடங்கு பயன்படும். உண்மையில், இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு அலை ஏன் குறைந்தது என்பதற்கு அறிவியல் ரீதியான தரவுகள் நம்மிடம் இல்லை. அது, இயற்கையாகவே நடந்திருக்கலாம். ஆட்சியாளர்களிடத்திலும் கொரோனா பாதிப்புகள் குறைந்ததற்கான தரவுகள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அலட்சிய போக்குடன் செயல்பட்டதா?
நிச்சயமாக... எந்த முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு செய்யவில்லை. ஐரோப்பாவில் தோன்றிய இரண்டாவது அலை, ஏதோ... அப்படியே போய்விடும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் காணப்பட்டது. பிப்ரவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடுகிறது. எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்த பின்புதான் தேர்தல் பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்தது. அதுவும், 500 பேர் மிகாமல் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஏன்.... 500 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று வந்தால் பரவாயில்லையா? பொதுக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்திருக்க வேண்டாமா? தேர்தல் ஆணையத்தின் இந்த கடைசி நேர உத்தரவு எந்த பலனையும் தராது.
பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பிசிசிஐ இந்தியா - இங்கிலாந்து போட்டிகளை நடத்தியது. ஓவ்வொரு ஆட்டத்திலும், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை விட, பெரிய வேடிக்கை இருக்க முடியுமா?
இந்தியா கொரோனா கர்வ் ( Curve) வளைச்சிட்டோம் என்று பிப்ரவரி மாதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவரதன் கூறுகிறார். அதென்ன? ராமர் வில்லா? புடுச்சு வளைக்க?
மருத்துவ உள்கட்டமைப்பில் எந்த முன்னேற்பாடும் இல்லையா?
சிகிச்சை, சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நாம் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். தடுப்பூசிகளை பொறுத்த வரையில் மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை. இரண்டு தடுப்பூசிகளுக்கு மட்டும் அவசர பய்ன்பட்டிற்கு அனுமதி, மற்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடையாது. இப்போது, அவசர அவசரமாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசி விசயத்தில் மத்திய அரசு கட்டப் பஞ்சாயத்துதான் நடத்தியது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (பிஎஸ்ஏ) ஆக்ஸிஜன் தயாரிப்பு வசதிகளை நிறுவ மத்திய அரசு நிதிஒதுக்கீடு செய்தது. இதில், தற்போது எத்தனை முடிவடைந்துள்ளன? தற்போது ஆக்ஸிஜன் பாற்றாக்குறையால் அப்பாவி பொது மக்கள் மடிந்து வருகின்றனர். ஊரே, சுடுகாடாய் காட்சியளிக்கிறது. கிரியோஜினிக் சிலிண்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஸ்டோரேஜ் தொழில் நுட்பங்கள் இந்தியாவில் இல்லை. கடந்த, ஓராண்டு காலத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டாமா? இதற்கெல்லாம், யார் பொறுப்பேற்க வேண்டும்? அதிகாரத்தை குவித்து வைத்திருப்பவர்கள் தான் பொறுபேற்க வேண்டும்.
12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சொல்கிறதே ?
இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி. தற்போது, 12 கோடி பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதர மக்களுக்கு கொரோனா ஆபத்து வராதா? பிரதமர் மோடி பெரும் முயற்சியெடுத்து 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டார், நாம் இந்திய மக்களை தாக்கக்கூடாது என்று கொரோனா வைரஸ் தானாக விலகி சென்றுவிடுமா? உலகில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்பதை ஏன் இவர்களால் அறிவிக்க முடியவில்லை. கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு ஒதுக்கிய 35,000 கோடி ரூபாய் எங்கே? ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டால் கூட இந்த நிதி போதுமானது. கடந்த ஆண்டு முதல் பெட்ரோல்/டீசல் மீதான் வரி மட்டும் 4 லட்சம் கோடி. அதில் 10-இல் 1 பங்கு செலவுசெய்தால் கூட நாட்டு மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அறிமுகம செய்யலாம். அதைக்கூட செலவு செய்ய வழியில்லையா? தடுப்பூசி உற்பத்தியாளர்கள், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கு வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.
ஏன்.. இந்த அனுமதி?
மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி கடன் தொகையைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலங்கள் வருமானம் இல்லாமல் தவிக்கிறது. சந்தையில் கடன் வாங்கும் திராணியும் அதனிடம் இல்லை. இந்நிலையில், மாநிலங்களுக்கு தடுப்பூசியை கூடுதல் விலைக்கு விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது, மிகவும் தவறான முடிவு.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீர்க்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் :
எந்தவொரு குறிப்பிட்ட மாநிலத்தின் பகுதிகளிலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதற்காக எல்லையை கடந்து செல்லும் வாகனங்களை தடைசெய்யக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், போதுமான ஆக்சிஜன் உற்பத்தி எங்கே? 10 தொழிற்சாலை நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் கட்டுப்பாடுகளில் இருந்து இதே மத்திய அரசு தான் விலக்கு அளித்திருந்தது. உண்மையில், நாட்டின் மொத்த ஆக்ஸிஜன் உற்பத்தியில் இந்த 10 வகையான தொழிற்சாலைகள் 50% ஆக்ஸிஜனை பயன்படுத்தி வருகின்றன.தற்போது, இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா தாக்கம் உச்சநிலையை அடையும் என்று கணிக்கப்படுகிறது. அதிகப்படியான நோயாளிகள் வரும் நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இன்னும், 10 நாட்களில் நாம் மிகப்பெரிய அவலத்தை சந்திக்க இருக்கிறோம் என்பதுதான் என்னுடைய வாதம்.
போட்டுக்கொள்ள தடுப்பூசி இல்லை, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லை, மரணமடைந்தால் தீமூட்ட சுடுகாட்டில் இடமில்லை. இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலையாக உள்ளது.
பொருளாதார ரீதியாக ஏற்படும் தாக்கங்கள் என்ன?
மனித உயிர்களே விலை மதிப்பற்ற நிலையில் உள்ளது. இதில், பொருளாதாராம் பற்றி எப்படி பேசுவது? மீண்டும் ஒரு பொது முடக்கநிலை அமல்படுத்தப்பட்டால் தொழில் நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறவே முடியாது.
அரசாங்கம் என்னதான் செய்ய வேண்டும்?
இதை மத்திய அரசு முன்கூட்டியே யோசித்திருக்க வேண்டும். கடந்தாண்டு போடப்பட்ட பொது முடக்கத்தில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? சாமானியர்கள் ஒருமுறை பொறுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் சுய பெருமையை குறைத்துக் கொண்டு மருத்துவ உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அப்படி அரசு செய்தியிருக்குமாயின், மக்கள் இந்த இரண்டாவது கொரோனா அலையோ வேறு விதமாக எடுத்திருக்க வாய்ப்புண்டு. அரசுக்கு ஆதாரவாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வந்திருப்பார்கள், அல்லது கடவுளின் செயல் என்று ஏற்றுக்கொண்டிருப்பார்கள். உலகில், எந்த அரசாவது இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தனியார் உற்பத்தியாளர்களுக்கு வழங்குமா? மத்திய அரசுக்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு விற்கும்போதே, லாபம் கிடைப்பதாக சீரம் நிறுவனர் தெரிவித்திருந்தார். தற்போது, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளார். இதற்கு, வாய்ப்பு வழங்கியது யார்? மத்திய அரசுதான்.