Salem: சேலத்தில் ஆய்வு மேற்கொண்ட குமாரசாமி! நேரில் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ.!
சேலம், விசாகப்பட்டினம், கர்நாடகா விஸ்வேஸ்ரய்யா உருக்காலை ஆகிய மூன்று உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து பிரதமரின் வழிகாட்டுதலுடன் புது டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும்.
மத்திய கனரகத் தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சராக குமாரசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சேலம் உருக்காலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சாலை மார்க்கமாக உருக்காலையை வந்தடைந்த குமாரசாமிக்கு உருக்காலை செயல் இயக்குனர் பாண்டே தலைமையில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட குமாரசாமி உருக்காலை வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
சேலத்தில் குமாரசாமி ஆய்வு:
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உருக்காலையின் நிர்வாக அமைப்பு, பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எந்தெந்த பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தான விவரங்களை தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் உருக்காலையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோரிக்கை:
தொடர்ந்து, சேலம் இரும்பாலையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமியை நேரில் சந்தித்து, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கோரிக்கை மனு வழங்கினார். குறிப்பாக இரும்பாலைக்கு விவசாயிகளிடமிருந்து நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தி, மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இதில் 700 ஏக்கர் அளவிற்கு உருக்காலை நிறுவனத்திற்கு நிலத்தை பயன்படுத்தி உள்ளனர்.மேலும் 4000 ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் உள்ளது.
விவசாய நிலங்களை எடுத்த நோக்கத்திற்கு பயன்படுத்தாவிட்டால், கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளிடமே திரும்பிக் கொடுக்கவேண்டும் என்று நிலை உள்ளது; எனவே நிலம் கொடுத்த விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ள நிலையில் விகிதாச்சார அடிப்படையில் திரும்ப கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் உருக்காலை நிறுவனத்திற்குள் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் மற்றும் தற்போது இரும்பாலை நிறுவனத்திற்குள் புகுந்து மக்கள் செல்லும் சாலையில் அடிக்கடி மூடிவிடுவதால் சிரமம் உள்ளது. இதனால் இரும்பாலை பகுதியிலிருந்து சித்தர் கோவில் செல்வதற்கு சாலை அமைத்துக் கொடுத்துவிட்டால் மக்கள் மிகுந்த பயனடைவார்கள் எனவும் கூறினார்.
பின்னர் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "சேலம் வருகையின் நோக்கம், சேலம் உருக்காலை எவ்வாறு செயல்படுகிறது, அதை எவ்விதம் மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காகத்தான். சேலம் உருக்காலையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சேலம் உருக்காலை குறித்து அளிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சேலம் உருக்காலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்வது குறைந்துள்ளது. அதற்கு பிறகு ஏற்ற இறக்கத்துடன் சேலம் உருக்காலை மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது. சேலம் உருக்காலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், முதலீடு செய்யப்படும் பணத்தை எவ்வாறு திரும்ப எடுக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. ஒரிரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சேலத்திற்கு வருகை தந்து விரிவாக்கம் குறித்து மேலும் ஆலோசிக்கப்பட உள்ளது என்றார்.
தென்னிந்தியாவில் உள்ள முக்கிய உருக்காலைகளான, சேலம், விசாகப்பட்டினம், கர்நாடகா விஸ்வேஸ்ரய்யா உருக்காலை ஆகிய மூன்று உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து பிரதமரின் வழிகாட்டுதலுடன் புது டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். ஆந்திர முதலமைச்சரையும் அழைக்க உள்ளோம்" என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.