Brahma Kamalam: ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் ‛பிரம்ம கமலம்’ பூ ; பழனியில் பூத்தது
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் இந்த பூ, திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் ஒருவர் வீட்டில் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் ஒருவர் வீட்டில் வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மகமலம் பூக்கள் பூத்துள்ளதை பலரும் பார்த்து வியந்து செல்கின்றனர்.
எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்’ என இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.
இந்த பூ இரவில் பூத்து காலையில் வாடிவிடும் தன்மை கொண்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் இந்த செடி நேற்று நள்ளிரவு பூத்தது. ஒரே செடியில் மூன்று பூக்கள் பூத்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் செடி முன் விளக்கு, கோலம் வரைந்து வழிபட்டனர். இதுகுறித்து வீட்டினர் கூறுகையில், கடந்த 2018ம் ஆண்டு பூத்தது, அதற்கு பிறகு தற்போதுதான் பூத்துள்ளது. இந்த பூ பூக்கும் செடியை வைத்திருப்பதே எனக்கு பெருமை தான். இதை ஏராளமானோர் பார்த்து செல்வதாக, ’ தெரிவித்தார்.
பூக்கள் என்றாலே அழகு, அதிலும் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ என்றால் சொல்லவா வேண்டும். அழகோ அழகு தான்.