Amit Shah: சென்னை வந்தார் அமைச்சர் அமித்ஷா.... மின் தடையால் பரபரப்பான விமான நிலையம்! நள்ளிரவில் நடந்தது என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்சாரம் தடைப்பட்டதால் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பாஜக தீவிரமாக களம் கண்டுள்ளது. அந்த வகையில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாத காலம் நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டமானது பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் செய்துள்ளனர். இதற்கிடையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியிலும் இன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தார்.
அமித்ஷா வருகை - மின்சாரம் துண்டிப்பு
விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனையடுத்து அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அமித்ஷா சென்றார். செல்லும் வழியெங்கும் பாஜகவினர் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அமித்ஷாவும் தொண்டர்களை பார்த்து கை அசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்துக்கு வந்த நிலையில் திடீரென அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. அவர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது மின்சாரம் தடைபட்டு அந்த பகுதியே இருட்டாக காட்சியளித்தது. சில நிமிடங்களுக்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டதால் தொண்டர்கள் கோபமடைந்தனர். உடனடியாக தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அமித்ஷாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். தொண்டர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் 2 கி.மீ. நீளத்துக்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே மின் தடை தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, ‘உயர்மின்னழுத்த பாதையில் ஏற்பட்ட கோளாறு தான் மின் தடை ஏற்பட காரணம்’ என காரணம் என தெரிவித்துள்ளார்,