Annamalai DMK Files: "என் வீட்டு வாடகை கூட என் நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள்” - அண்ணாமலை பேச்சு
திமுக பிரமுகர்கள் பற்றிய சொத்து பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது வீட்டு வாடகைகூட நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள் என கூறியுள்ளார்.
திமுக பிரமுகர்கள் பற்றிய சொத்து பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது வீட்டு வாடகைகூட எனது நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள் என கூறியுள்ளார்.
கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும். அப்படி வெளியிடும்போது மக்கள் இன்னும் சந்தோஷத்தில் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுவார்கள் என தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அண்ணாமலை, ” சாமானியன் அரசியலில் இருப்பது கடினம். என்னை யாரும் வழி நடத்தவில்லை. நான் முதல் தலைமுறை அரசியல்வாதி. சாமானிய முதல் தலைமுறைக்கு இருக்கும் பிரச்சனை எனக்கும் உள்ளது. மாதத்திற்கு ஒரு அரசியல்வாதியாக 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகின்றது. சுற்றி இருக்கக்கூடிய நண்பர்கள் மற்றும் கட்சியின் உதவியால்தான் செலவை சமாளித்து வருகிறேன். மூன்று உதவியாளர்களுக்கு மூன்று நண்பர்கள் சம்பளம் கொடுக்கின்றனர். வண்டியின் டீசல் செலவு கட்சி பார்த்துக்கொள்கிறது. வீட்டு வாடகை வேறு ஒரு நண்பர் கொடுக்கிறார்” என தெரிவித்தார்.
மேலும், “ஐபிஎஸ் அதிகாரியாக பதிவியேற்ற முதல் மாத சம்பளம் முதல் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். என் வங்கி சார்ந்த பணப்பரிவர்தனை பற்றிய முழு விவரம் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் இந்த விவரங்களை பார்த்தால், இந்த சொத்து மதிப்பை வைத்து எப்படி மாநில தலைவர் பொறுப்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் எழும். இது நியாயமான கேள்விதான். அசாதாரணமான சூழலில்தான் நான் மாநில தலைவராக இருக்கிறேன். பொறுப்பில் இருக்கும்வரை தான் சென்னையில் இருப்பேன். பொறுப்பு இல்லை என்றால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வேன்” என கூறியுள்ளார்.
மேலும் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றியும் கூறியுள்ளார். “நான் கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரத்தை பெல் அண்ட் ரோஸ் எனும் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேஷன் எனும் பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்கள் காரணமாக, ரஃபேல் கைக்கடிகாரம் ஒரு செங்கல் அளவிலான எடையை கொண்டது. 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோவையை சேர்ந்த சேரலாதன் என்பவர் வாங்கினார். எனது நண்பரான அவரை அணுகி அந்த கைக்கடிகாரத்தை மே மாதம் 27-ம் தேதியன்று நான் வாங்கினேன். பெங்களூரு காவல்துறையில் பணியாற்றியபோது, லஞ்ச பணத்தில் வாங்கியது என கூறுவது எல்லாம் உண்மை அல்ல. இதுதொடர்பாக சிலர் போலியான ரசீதுகளை பகிர்ந்து வருகின்றனர். 3 லட்ச ரூபாய்க்கு வாங்கிய இந்த ஒரு கைக்கடிகாரத்தை மட்டும்தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பயன்படுத்தி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.