முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோய் பாதித்த குழந்தை பாரதிக்கு 16 கோடி செலவில் ஊசி போடப்பட்டது
16 கோடி நிதி திரட்ட காரமாணமாக இருந்து 20 லட்சம் வழங்கிய நடிகர் விஜய்சேதுபதிக்கும், தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் மற்றும் நிதி வழங்கிய அனைவருக்கும் பாரதி மற்றும் எங்களின் சார்பில் நன்றி
தஞ்சாவூரில், முதுகு தண்டுவட தசை நார்ச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 16 கோடியில் ஊசி செலுத்தப்பட்டது. தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உண்டியல் மூலம், பல்வேறு விதமாக நிதி திரட்டி வழங்கியுள்ளனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகேயுள்ள சிராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ரெப்கோ வங்கியில் பணிபுரியும் ஜெகதீஷ் -எழிலரசி தம்பதியரின் 22 மாத குழந்தை பாரதி முதுகுத்தண்டுவட தசைநார்ச் சிதைவு என்கிற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பாரதியின் உடல் உறுப்புகள் செயல்பாடு ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நோயில் இருந்து பாரதி குணமடைய இரண்டு வயதுக்குள்ளாக ஜோல் ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஊசி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதன் விலை 16 கோடி. இந்த குழந்தையைக் உயிருடன் காப்பாற்ற போதுமான நிதி இல்லாததால், நிதியைத் திரட்ட வேண்டி அவர்களது பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை நண்பர்களுடன் இணைந்து செய்து வந்தனர்.
முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு நோய் பாதித்த தஞ்சாவூரை சேர்ந்த குழந்தை பாரதிக்கு 16 கோடி செலவில் ஊசி போடப்பட்டது pic.twitter.com/XUvycub37y
— Kathiravan (@kathiravan_vk) December 11, 2021
இந்நிலையில் பாரதிக்கு உதவுகிற வகையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிதி திரட்டும் பணியை கடந்த செப். 2 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும் தஞ்சாவூர் நகரம் முழுவதும் குழந்தை பாரதிக்காக பல்வேறு இடங்களில் நிதி சேகரிக்கும் பணியை தன்னார்வலர்கள் செய்து, நிதியை வழங்கி வந்தனர். குறைந்த காலத்தில் மேலும் அதிக நிதி தேவைப்படுவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் தஞ்சாவூர் பனகல் கட்டடம் எதிரில் மனித சங்கிலி நிகழ்ச்சியை நடத்தி நிதி உதவி கோரினர். பாரதிக்கு தேவையான நிதி பெறுவதற்காக பல்வேறு அமைப்புகள் போர்கால அடிப்படையில் நிதியை திரட்டினர். மேலும், நிதி திரட்ட முடிவு செய்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் வங்கியில் கணக்கு திறந்துள்ளோம். அக்குடும்பம் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களால் அவ்வளவு நிதி திரட்ட முடியாது. அதற்காக தான் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வருகின்றோம். பெண் குழந்தை பாரதி உயிருடன் நலமுடன் வாழவேண்டும் என மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாரதிக்கு தேவையான 16 கோடி நிதி திரட்டப்பட்டு 10ஆம் தேதி ஊசி செலுத்தப்பட்டது.
இந்த ஊசியை டாக்டர் ஆன் அங்கனேஷ் மேத்யூ மற்றும் குழுவினர் செலுத்தினர் இது குறித்து தந்தை ஜெகதீஸ் கூறுகையில், இயற்கையாக புரோட்டீன் சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்தின் விலை 16 கோடி, அதை இறக்குமதி வரி 6 கோடி என 22 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாததால். நடிகர் விஜய்சேதுபதி, மாவட்ட கலெக்டர், நண்பர்கள், உறவினர்கள் உதவியால் 16 கோடி தான் கிடைத்தது. மீதமுள்ள 6 கோடி வரியை தள்ளுபடி செய்து விட்டார்கள்.
10ஆம் தேதி காலை 9.30 பெங்களூரில் உள்ள பேடிஸ்ட் மருத்துவமனையில் உள்ள டாக்டர் ஆன் அங்கனேஷ் மேத்யூ மற்றும் மருத்துவ குழுவினர்கள் செலுதினர். நேற்று காலை 11.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். பின்னர் உணவுகளை சாப்பிட்டு வருகின்றார். தற்போது நலமாகவும், திடமாகவும், ஆரோக்கியமாகவும் பாரதி உள்ளார். ரத்த மாதிரி, கிட்னி உள்ளிட்ட உறுப்புகள் சரியாக செயல்படுகிறதா என்று மருத்துவர்கள் அடிக்கடி பார்வையிட்டு, சிகிச்சையளிக்க உள்ளனர். பாரதிக்கு வெளிநபர்கள் வந்து பார்த்தால் தொற்று ஏற்படும் என்பதால், தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளோம். மருத்துவர்கள் உரிய அனுமதி அளித்தவுடன், மூன்று மாதம் கழித்து தஞ்சாவூர் வருவோம் என்று தெரிகிறது. எங்களது குழந்தை காப்பாற்ற வேண்டும் என நம்பிக்கையில் இருந்து, எங்களுக்கு 16 கோடி நிதி திரட்ட காரமாணமாக இருந்து 20 லட்சம் வழங்கிய நடிகர் விஜய்சேதுபதிக்கும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர் மற்றும் நிதி வழங்கிய அனைவருக்கும் பாரதி மற்றும் எங்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.