Senthil Balaji: 6 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம்; அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் இருந்த நிலையில், தற்போது அவர் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
எதனால் கைது
திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது, கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது வசம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியின்போது 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜிபோக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்தியபோது, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லை எனவும், பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் கூறி செந்தில் பாலாஜி மீது நேரடியாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து அமலாக்கத்துறை வசம் வந்தது. அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பல முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை செக் வைத்தது எங்கே?
கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியர் அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றனர் எனக்கூறி செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் கொடுத்திருந்தார். முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இதையடுத்து செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என தனி வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கினை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்
மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனது பங்கிற்கு வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது. மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டின்படி, மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது மட்டும் இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்தது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.